சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த ஒரு மெகா சொதப்பலால் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல் வரலாற்று புத்தகத்தில் இடம் பெற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஐசிசி தொடர்களின் ஹட்ரிக் சாதனை என்பது காலத்தால் அழியாமல் நிற்கும் ரெக்கார்டு ஆகும்.
இதுவரை சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு இந்திய வீரரும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதில்லை. இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேல் கையில் பந்து வந்தவுடன் விக்கெட்டுகள் மளமளவென விழத் தொடங்கியது.
வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் சமி மற்றும் ஹர்சித் ரானா ஆகியோரின் பந்துவீச்சை சாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தடுமாறிய போது சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அடிப்பது போல் அக்சர் பட்டேல் தன்னுடைய பந்துவீச்சு மூலம் மேஜிக்கை நிகழ்த்தினார்.
முதலில் அபாரமாக விளையாடி வந்த டன்ஷித் ஹசன் விக்கெட்டை அக்சர் பட்டேல் 8.2வது ஓவரில் வீழ்த்தினார். அதன்பிறகு 8 புள்ளி மூன்றாவது ஓவரில் வங்கதேச அணியின் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹிம் விக்கெட்டை அக்சர் பட்டேல் எடுத்தார். இதனால் அக்சர் பட்டேலுக்கு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த மகத்தான வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து கேப்டன் ரோகித் சர்மா வீரர்கள் அனைவரையும் பேட்ஸ்மேன்களுக்கு அருகே நிற்க வைத்தார். இந்த சூழலில் ஜேக்கர் அலி ஹட்ரிக் பந்தை எதிர்கொண்டு விளையாடினார். ஆனால் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடமே சென்றது. ஆனால் ரோகித் சர்மா இதை பிடிக்காமல் தவறவிட்டார்.
இதையும் படிங்க- IND vs BAN: வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டது ஏன்.?. ஆர்ஸ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு இல்லை.. காரணம் இது தான்
தம்மால் ஒரு ஹாட்ரிக் சாதனை போய்விட்டது என்ற அதிருப்தியில் ரோகித் சர்மா ஆடுகளத்தில் தனது கையை போட்டு அடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து அக்சர் பட்டேலிடம் தன்னுடைய இரண்டு கைகளையும் கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். பொதுவாக எந்த வீரரும் பில்டிங்கில் தவறு செய்தால் ரோகித் சர்மா கோபமாக கேள்வி கேட்பார். ஆனால் ரோகித் சர்மாவே தற்போது தவறு செய்து விட்டதால் அவர் நொந்து போனார். கேப்டனை எவ்வாறு திட்ட முடியும் என்பதால் அக்சர் பட்டேலும் அமைதியாக சென்றுவிட்டார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.