இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியன் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!
இன்று மத்திய பிரதேசம் இந்தூர் மைதானத்தில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. இந்த மைதானம் மிகவும் சிறிய பவுண்டரி எல்லைகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கடந்த போட்டியில் மிகப் பொறுப்பாக, அருமையாக அரை சதம் அடித்திருந்த ருத்ராஜ் எட்டு ரன்களில் வெளியேறினார். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆரம்பத்திலேயே விக்கெட் கொடுத்தது கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.
மேலும் இந்த போட்டியில் எப்படியாவது ரன் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கின்ற ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளே வந்தார். அவரைச் சுற்றி அழுத்தம் நிறைய இருந்தபொழுதும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல், நம்பிக்கையுடன் தைரியமாக விளையாடினார்.
இவருடன் சேர்ந்து நின்ற சுப்மன் கில் எட்டு ஓவர்கள் வரை அவரை ஆடவிட்டு ஒத்துழைப்பு தந்தார். அதுவரை அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகள் வரவில்லை. அதற்கு அடுத்து பவர் பிளேவில் மீதம் இருந்த இரண்டு ஓவர்களில் அதிரடியில் அசத்தினார்.
இப்படி மாறி மாறி இருவரும் தங்களுக்குள் நல்ல ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டு விளையாடி அரை சதத்தை நிறைவு செய்தார்கள். மேலும் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தார்கள்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஜோடியில் முதலில் 87 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தால். இது அவருக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது சதம் ஆகும். மேலும் அவர் 105 ரன்கள் எடுத்து 216 ரன்கள் அணியின் ஸ்கோர் இருந்த பொழுது ஆட்டம் இழந்தார். கில் 104 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டம் இழந்தார்.
இந்த ஜோடி இந்த ஆட்டத்தில் மிகச் சரியாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நிறைவு செய்து இருக்கிறது. இதன் மூலம் இந்தூர் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் இருவரும் 2001 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 199 ரன்கள் அமைத்திருந்த பார்ட்னர்ஷிப்பை சாதனையை முறியடித்து, இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.