எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய யு-19 அணி – இலங்கை அணி படுதோல்வி

0
2400
India U-19 Asia Cup Final

2021 ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2022ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்திய சீனியர் அணிக்கு இந்த ஆண்டு விடச் சிறந்த ஆண்டாக அமையாவிட்டாலும் அந்நிய மண்ணில் முக்கிய டெஸ்ட் போட்டிகளை ஜெயித்தது போன்ற சில மறக்க முடியாத நினைவுகளை நமக்கு கொடுத்துள்ளது. தற்போது ஜூனியர் இந்திய அணியும் புத்தாண்டு பிறக்க இருக்கும் இந்த சமயத்தில் நமக்கு நல்ல புத்தாண்டு பரிசு ஒன்றை கொடுத்துள்ளது. அமீரகத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

துபாய் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. யாருமே அதிக நேரம் களத்தில் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்காததால் அந்த அணி 38 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை குறுக்கிட இலங்கை அணியின் இன்னிங்ஸ் அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்பிறகு DL முறைப்படி இந்திய அணிக்கு 38 ஓவர்களில் 102 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகவும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஹர்னூர் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்னூர் சிங் வேகமாக ஆட்ட மறந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய ஷேக் ராஷித் 31 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 22வது ஓவரிலேயே இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி எட்டிப்பிடித்தது. இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் ஆசிய கோப்பையை தனதாக்கியது இந்திய அணி. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்து இருந்தாலும் அதன் பிறகு சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இதன் மூலம் எட்டாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வரும் ஆண்டு நடக்க இருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் விளையாட இது நல்ல ஒரு முன்னோட்டமாக இந்திய வீரர்களுக்கு அமைந்துள்ளது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க இருப்பதால் இந்த இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்களுடன் விளையாட நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.