தற்போது உலகில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் எந்த அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு இருக்கும் தனி வரலாறு இருக்காது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் என்பது அடிமைத்தனத்திற்கு எதிரான விளையாட்டு வடிவமாகவே 70, 80 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது!
இவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக வெளிப்படுத்திய வேகம் மற்றும் தீவிரம் வேற எந்த அணிகளுக்கு எதிராகவும் வெளிப்படுத்தியது இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விளையாட்டோடு அடிமைத்தனத்திற்கு எதிரான குணமும் சேர்ந்திருந்தது!
இதை 75க்கு மேல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்குள் வந்த விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்திற்கு சென்று இங்கிலாந்து கவுண்டி அணிகளில் விளையாடி, விளையாட்டின் மூலம் செயல்படுத்தியே காட்டியவர். இன்று வரை அச்சமற்ற விளையாட்டுக்கு இவர்தான் முன்னுதாரணமாக முதலில் காட்டப்படுபவராக இருப்பவர்.
கிரிக்கெட் உலகில் மிக வேகமாக எழுந்து 70, 80களில் கிரிக்கெட் உலகின் அறிவிக்கப்படாத அரசனாக வலம் வந்தது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட். பின்பு தொண்ணூறுகளில் கொஞ்சமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேய ஆரம்பித்தது.
அன்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் உடைவு மெல்ல மெல்ல பெரிதாகி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது, இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது என மிகவும் மோசமான நிலையை அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் டீம் ஆரம்ப ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார்கள்.
இப்படியான மோசமான நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுவதாக இருந்த பொழுது, அவர்கள் நாட்டு ரசிகர்களை பெரிய அளவில் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தாலும் மீண்டு வந்து டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சமீபத்தில் மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சமூக வலைதளத்தில் சந்தித்து வந்தது.
தற்போது இந்த வெற்றிக்குப் பிறகு பேசி உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் “வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து சில ட்வீட்டுக்களை பார்த்தேன். உங்கள் நண்பர் மனக்காயம் அடைந்திருக்கும் பொழுது நீங்கள் அவரை விட்டுப்போக வேண்டும் என்று சொல்ல மாட்டீர்கள்தானே என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த மாதிரி நேரத்தில் எப்படி தீர்வுகளை கண்டறிவது என்று கூற வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். மாறாக இப்படி கேலி கிண்டல்கள் செய்யக்கூடாது. இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள்!” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்!