ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் இரண்டாம் பாதியில் வந்துவிடுவார்… அதுவரை தற்காலிக கேப்டனை கொல்கத்தா அணி அறிவித்துள்ளது!

0
424

காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தற்காலிக கேப்டனை நியமித்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், மீண்டும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அறுவை சிகிச்சை நடந்தால் அடுத்த 7-8 மாதங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவரால் விளையாட முடியாது என்றும் மருத்துவர்களால் கூறப்பட்டது.

50-ஓவர் உலகக்கோப்பை மிகவும் முக்கியம் என்பதால் அறுவை சிகிச்சை வேண்டாம், தற்காலிக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். சிகிச்சையில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த வருட ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் இருக்க மாட்டார். இரண்டாம் பாதியில் இணைவார் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் முதல் பாதியின் தற்காலிக கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சர்துல் தாகூர் மற்றும் சுனில் நரேன் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டது.

ஆனால் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைமை வெளியிட்ட அறிக்கையில், “நிதிஷ் ராணா பேட்டிங்கில் தொடர்ந்து நம்பிக்கை அளித்து வந்திருக்கிறார். சமீபத்தில் டெல்லி அணிக்காக கேப்டன் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் நிதிஷ் ராணாவிற்கு உரிய சப்போர்ட் கொடுக்க வேண்டும். இறுதியில் அணியின் வெற்றியே முக்கியமானது. இணைந்து செயல்படுவோம்.” என்று குறிப்பிட்டிருந்தது.

2018ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதிஷ் ராணா நம்பர் 3 வீரராக களமிறங்கி ஒவ்வொரு சீசனிலும் 300 ரன்களுக்கும் அதிகமாகவே அடித்திருக்கிறார். இதுவரை மூன்று கேப்டன்களுடன் பயணித்த இவர் மீது நம்பிக்கை வைத்து கொல்கத்தா அணி நிர்வாகம் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது.