சிஎஸ்கே அணிக்குள் வந்ததும் எனக்கு கொடுக்கப்பட்ட ரோல் இதுதான். பைனல் வரை அதில் துளி மாற்றமும் செய்யவில்லை. இதுதான் சிஎஸ்கே அணியின் இத்தனை வருட வெற்றிக்கு காரணமாக உணர்ந்தேன் என்றார் அஜிங்க்யா ரஹானே.
நடக்குமா? நடக்காதா? என்று பல்வேறு குழப்பங்களுடன் நடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 215 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை சேஸ் செய்ய வந்தனர் சிஎஸ்கே துவக்க வீரர்கள்.
முதல் ஓவர் முடிவதற்குள் மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் 15 ஓவராக போட்டி குறைக்கப்பட்டு மீண்டும் சிஎஸ்கே அணியினர் களமிறங்கினர். இம்முறை சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வழக்கம் போல துவக்க வீரர்கள் அபாரமாக ஆடிக்கொடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ரகானே மற்றும் தூபே இருவரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி கொடுக்க, கடைசி ஓவரில் ஜடேஜா சிக்ஸ் மற்றும் பௌண்டரி அடித்து அபாரமாக பினிஷ் செய்து கொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணியின் கோப்பை கனவு நனவாகியது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் புதிதாக எடுக்கப்பட்ட ரகானே அணிக்கு எப்படி செட் ஆவார் என்று பல சந்தேகங்கள் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது அதிரடியின் மூலம் சில போட்டிகளை தனி ஆளாக வெற்றி பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
இன்று பைனலில் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோப்பையை கைப்பற்றிய பிறகு அவர் பேசுகையில், சிஎஸ்கே அணியில் தனக்கு எப்படிப்பட்ட ரோல் கொடுக்கப்பட்டது? மற்றும் சிஎஸ்கே அணி இவ்வளவு வெற்றிகரமாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதையும் பகிர்ந்து கொண்டார். ரஹானே கூறியதாவது:
“இந்த வெற்றியை நான் மிகவும் என்ஜாய் செய்கிறேன். இந்த வெற்றிக்கு முழு காரணமாக இருப்பவர்கள் சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் மாகி பாய். நான் சிஎஸ்கே அணிக்கு வந்தபோது, ‘உனக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், என்னுடைய ரோல் அணியில் இதுதான்; அதில் என்ன நடந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி முழுமையாக சப்போர்ட் செய்வோம்.’ என்று சீசன் துவங்குவதற்கு முன்பே தெரிவித்துவிட்டார்கள்.
அதன் பிறகு நான் என்ன செய்தாலும் அதில் அவர்கள் தலையிடவில்லை. முழு சுதந்திரத்தையும் கொடுக்க கொடுத்தார்கள். சிஎஸ்கே போன்ற மிகப்பெரிய அணியில் இருந்து இப்படி ஒரு சப்போர்ட் கிடைக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. அதை கடைசி நாள் வரை செய்தார்கள். இந்த சீசன் முழுவதும் நான் விளையாடிய விதம் எனக்கே மகிழ்ச்சி அளிக்கிறது. இதை ஸ்பெஷல் சீசனாக உணர்கிறேன்.
ஜடேஜா எப்படிப்பட்ட ஆல்ரவுண்டர் என்று நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. மிகச்சிறந்த கேரக்டர், போட்டியில் முனைப்பு மற்றும் கடினமான உழைப்பு ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்தவர் தான் ஜடேஜா. இன்று அவர் விளையாடிய விதம் ஒட்டுமொத்த அணிக்கும் ஸ்பெஷலாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.”
மேலும் பேசிய ரஹானே, சிஎஸ்கே எப்படி இவ்வளவு வெற்றிகரமான அடையாளம் இருப்பது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார். “அணியில் இருக்கும் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை அனைவருக்கும் சீசன் துவங்கும் முன்பே அணியில் அவர்களது ரோல் என்னவென்று கூறப்பட்டுவிடுகிறது. பிளேயிங் லெவனில் இருக்கமாட்டார்கள் என்றால், அதையும் முன்பே சொல்லிவிடுகிறார்கள். எந்த சமயத்தில் பிளேயிங் லெவனில் எடுப்போம் என்பதையும் கூறிவிடுவதால், ஒவ்வொருவருக்கும் அவர்களது ரோல் தெளிவாகிறது. எந்தவித குழப்பமும் நேர்வதில்லை.
சீசன் முழுவதும் அதில் கவனம் செலுத்தி 100% வெளிப்படுத்த முடிகிறது. அப்படியே வெளிப்படுத்துவதில் தவறு நேர்ந்தாலும் அணி நிர்வாகம் எந்தவித கேள்வியும் கேட்பதில்லை. தலையிடுவதும் இல்லை. அதை சார்ந்து புதுவிதமாக நடத்தப்படுவதும் இல்லை. முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை ஒரே விதமாக நடத்துவார்கள். சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடும் கிடையாது. இதுதான் அவர்களை இவ்வளவு வெற்றிகரமான அடியாக வைத்திருக்கிறது.” என்று பகிர்ந்தார்.