இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. தற்போது பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இந்த தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி என்ற இரண்டு உலக கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல ஸ்ரீசாந்த் கடைசி நேரத்தில் பிடித்த கேட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் ஸ்ரீசாந்த இடம் பெற்றிருந்தார். ஆனால் அதன்பிறகு சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஸ்ரீசாந்த். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் முழுவதும் இவருக்கு தடைவிதித்த பிசிசிஐ அதன்பிறகு தடையை 7 ஆண்டுகளாக மாற்றியது.
கடந்த 2020ல் போர்டு தடை முடிந்தவுடன் கேரளாவுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தும் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருந்தார். ஓய்வு பெற்றதற்கு பிறகு பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் இனிமேல் கவனம் செலுத்தப் போவதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். மேலும் அவர் நடித்துள்ள தமிழ் படம் காத்துவாக்குல ரெண்டு காதல் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்றும் கன்னடப் படம் ஒன்றிலும் தான் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடைசி போட்டி ஒன்று விளையாட ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்ததாகவும் அதை கேரள கிரிக்கெட் அசோசியேஷன் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
முற்றிலும் ஓய்வு பெற்று விட்டதால் இனி உலகம் முழுக்க பல்வேறு லீக் கிரிக்கெட்டில் விளையாட போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பயிற்சியாளர் வேலைக்கும் அவருக்கு சில விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஸ்ரீசாந்த்தை பல லீக் போட்டிகளிலும் பயிற்சியாளர் அவதாரத்திலும் காணலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.