” இது நடக்காமல் இருந்திருந்தால் டெஸ்ட் தொடரை வென்றிருப்போம் ” கேப்டன் பும்ரா வேதனை

0
111
Jasprit Bumrah about Ind vs Eng test series

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாய் இருந்தது. இந்தப் போட்டிக்கான வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, புதிய தற்காலிக கேப்டனாக ஜஸ்ப்ரீட் பும்ரா அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த இந்திய அணி ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதங்களால் 416 ரன்களை குவித்தது. ஜேம்ஸ் ஆன்டர்சன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் 284 ரன்களுக்கு அடங்கியது. ஜானி பேர்ஸ்டோ மட்டும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மொகம்மத் சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 245 ரன்களுக்கு சுருண்டது. ரிஷாப் பண்ட் மட்டுமே அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 378 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் – ஜானி பேர்ஸ்டோ இருவரும் ஆட்டமிழக்காமல் 269 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு இருவரும் சதமடித்து இங்கிலாந்து அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற வைத்தனர்.

- Advertisement -

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா “இந்தத் தொடரின் முதல் போட்டியில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் நாங்கள் தொடரை வென்றிருக்கலாம். இந்த வெற்றிக்கான முழு அங்கீகாரமும் இங்கிலாந்து அணிக்கானது. அவர்கள் சிறப்பாய் விளையாடினார்கள்” என்றார்!