இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் வந்த பின்பு விருத்திமான் சஹாவிற்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் அவர் மொத்தமாகவே 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். மூன்று டெஸ்ட் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரை சதத்துடன் மொத்தமாக 125 ரன்கள் அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 25-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விருத்திமான் சஹாவிற்கு இடம் கிடைக்க போவதில்லை என்கிற செய்தி சமீபத்தில் தெரியவந்தது.
இதனையடுத்து விருத்திமான் சஹா இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க போவதில்லை என்று கூறி விலகிக் கொண்டார். இந்திய அணியில் தான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே அவர் குறித்து டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அவரை நாம் பாராட்ட வேண்டும்
இந்திய அணியில் விருத்திமான் சஹா இனி விளையாடாமல் போனால், என்னை பொறுத்த வரையில் அவரை நாம் பாராட்ட வேண்டும். அவர் ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவருக்கான உரிய அங்கீகாரத்தை நாம் கொடுத்தாக வேண்டும் என்றும், 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் கடினமான மைதானத்தில் அவர் விளையாடிய விதம் தலைசிறந்த ஆட்டம் என்றும் ஹர்ஷா போக்லே தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
If indeed @Wriddhipops doesn’t play for India again, I think we must applaud a fine career and acknowledge an extraordinary, world class wicket keeper. To me the highlight will be his performance in Sri Lanka in 2017 on a difficult surface. Wish him well.
— Harsha Bhogle (@bhogleharsha) February 10, 2022
இதுவரை 56 இன்னிங்ஸ்களில் மூன்று சதம் மற்றும் ஆறு அரைசதம் உட்பட மொத்தமாக 1353 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கேரியரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.41 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 45.51 ஆகும். 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 117 ரன்கள் சஹா குவித்தது குறிப்பிடத்தக்கது.