நான் மட்டும் 2011 அரை இறுதியில் விளையாடி இருந்தால் இந்த 2 இந்தியர்களின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பேன் – சோயப் அக்த்தர் உறுதி

0
123
Shoaib Akthar about 2011 WC Semi final

இந்திய கிரிக்கெட்டில் 2011ஆம் வருடம் மிக முக்கியமானது. 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த ஆண்டுதான் இந்திய அணி உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையில், உள்நாட்டில் நடந்த இறுதிபோட்டியில் வென்று அசத்தியது.

2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையின் இறுதிபோட்டி எந்தளவிற்கு கிரிக்கெட் இரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்றதாய் இருந்ததோ, அதைவிட இன்னொரு மடங்கு முக்கியத்துவம் இந்தியா பாகிஸ்தான் மோதிய அரையிறுதி போட்டிக்கு இருந்தது.

- Advertisement -

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா சச்சினின் 85 ரன்களால் 260 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் 231 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்ஆவுட் ஆனது. ஆசிஷ் நெக்ரா, முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகீர் கான் என பந்துவீசிய ஐந்து பவுலர்களுமே தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இந்த ஆட்டத்தில் உடற்தகுதி இல்லையென்று பாகிஸ்தான் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தருக்கு அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கவில்லை. இது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இன்று வரை பார்க்கிறார் சோயப் அக்தர்.

இது குறித்துப் பேசியுள்ள அக்தர் “2011ஆம் ஆண்டு மொகாலியில் நடந்த உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியின் நினைவுகள் என்னைத் துரத்துகின்றன. அணி நிர்வாகம் என்னை இணைத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அணி நிர்வாகம் எனக்குச் செய்தது முற்றிலும் நியாயமற்றது. எனக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமிருந்தது தெரியும். வான்கடேவில் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உலகம் முழுவதும் இந்திய அணியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அணி அழுத்தத்தில் இருந்ததை உணர்ந்தேன். அதேசமயத்தில் நாங்கள் எந்த அழுத்தத்தையும் ஏற்றிக்கொள்ளவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

இது தொடர்பாக மேலும் பேசிய அவர் “நான் அந்தப் போட்டியில் விளையாடத் தகுதியற்றவன் என்று சொன்னார்கள். நான் உள்ளே சென்று, எட்டு ஓவர்கள் வார்ம் அப்பிற்கு பந்து வீசினேன். நான் அந்த ஆட்டத்தில் ஆடியிருந்தால், விளைவுகள் எப்படி இருந்தாலும் சச்சின், சேவாக்கை வெளியேற்றி இருப்பேன். அவர்கள் சீக்கிரத்தில் ஆட்டமிழந்தால், இந்திய அணி எளிதில் சரிந்திருக்கும். நான் உண்மையில் மனக்காயம் அடைந்தேன். டக்-அவுட்டில் அமர்ந்து ஆறேழு மணி நேரங்கள் பாகிஸ்தான் அணி தோற்பதைப் பார்த்தேன். நான் உடைந்து அழக் கூடியவன் கிடையாது. எதையாவது உடைக்க கூடியவன். அன்று டிரஸ்ஸிங் ரூமில் சிலவற்றை உடைத்தேன். மொத்த தேசமும் என்னைப் போல்தான் இருந்தது. அந்த ஆட்டத்தில் முதல் பத்து ஓவர்கள்தான் மிக முக்கியம் என்று எனக்குத் தெரியும்” என்று தன் நீண்ட நாள் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.