இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது!
இந்தத் தொடர் வருகின்ற செப்டம்பர் 22 24 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடக்கிறது. மேலும் இந்திய அணி உலகக் கோப்பையில் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்தே விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த நிலையில் இந்தத் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளுக்கு கேஎல்.ராகுல் கேப்டனாக இருக்க ஒரு அணியும், கடைசி போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வழக்கமான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை விரல் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஆப் ஸ்பின்னர்கள் யாரும் இல்லாதது ஒரு குறையாக விமர்சனமாக இதுவரை முன்வைக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அக்சர் படேல் காயம் அடைந்திருக்கும் நிலையில், இப்படி ஒரு முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம் வந்திருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்கா கூறும்பொழுது ” உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நிச்சயமாக ஒரு நன்மை இருக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் சொந்த நாட்டில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னால் விளையாடுவது ஒரு பாதகமாகவும் அமையும். இந்தியாவில் கூட்டம் இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். அவர்கள் எதிரணியை தாண்டி இதையும் சமாளிக்க வேண்டும்.
அவர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்ற ஆல் ரவுண்டர்களை அதிகம் பார்க்கிறார்கள். ஆனால் விளையாடும் லெவனில் இல்லாவிட்டாலும், 15 பேர் கொண்ட அணியில் நிச்சயமாக ஆப் ஸ்பின்னர் அஸ்வின் இருக்க வேண்டும்.
அவர் விளையாடும் பொழுது அவர் மேட்ச் வின்னராக இருக்க முடியும். அவர் சற்றே வயதானவராக இருக்கலாம், களத்தில் கொஞ்சம் மெதுவாக இருக்கலாம். ஆனால் துணைக் கண்டத்தில் உங்களுக்கு விக்கெட் வீழ்த்தக்கூடிய அல்லது ரன்னை கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் தேவை. ஆப் ஸ்பின்னர் அஸ்வின் அணியில் இருந்தால்தான், அந்த அணி முழுமையானதாக இருக்கும்!” என்று கூறி இருக்கிறார்!