கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

அஸ்வின் தொடர்ந்து நம்பர் 1… இம்முறை இன்னும் கெத்தாக முன்னிலையுடன்! – ஆல்ரவுண்டர் பட்டியலிலும் டாப்!

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருப்பவரை விட 31 புள்ளிகள் முன்னிலையுடன் வலுவான முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவுற்ற பிறகு தரவரிசை பட்டியலை ஐசிசி தரப்பு வெளியிட்டு இருக்கிறது.

நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. இதற்காக ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் ஓவல் மைதானம் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களிலேயே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. இந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்திருந்தால் எளிதாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருப்பார் எனும் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

சாம்பியன்ஷிப் பைனலில் எடுக்கப்படவில்லை என்றாலும், அதன் பிறகு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 860 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 829 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். 31 புள்ளிகள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் அஸ்வின் இருந்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பத்து மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை என்றாலும், 772 புள்ளிகளுடன் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து எட்டாவது இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா 765 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி 14வது இடத்திற்கு சென்றிருக்கிறார். ரோகித் சர்மா தொடர்ந்து பன்னிரண்டாவது இடத்திலும் சித்தேஸ்வரர் புஜாரா இரண்டு இடங்கள் பின்தங்கி 25வது இடத்திலும் இருக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே 10 இடங்களுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by