இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் ஒரு நாள் தரவரிசையில் பெரிய முன்னேற்றங்கள் கண்டிருக்கிறார்கள்.
இதில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி சுப்மான் கில்லின் இடத்தை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறார். கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது பின்னடைவாகவும், வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு வரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.
ODI ரேங்கிங் அறிவிப்பு
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் நேற்றைய போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 84 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்னர் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி முன்னேற்றம் கண்டும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சரிவை சந்தித்தும் இருக்கும் நிலையில் பந்துவீச்சு வரிசையில் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டு இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி அபாரம்
கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி, ஒரு நாள் தரவரிசையில் தற்போது 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த வரிசையில் இந்திய துணை கேப்டன் சுப்மான்கில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். விராட் கோலி அவரை வேகமாக நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல அரை இறுதியில் 28 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா 2 இடங்கள் சரிந்து 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதேபோல பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முகமது சமி மூன்று இடங்கள் முன்னேறி 609 புள்ளிகள் உடன் 11வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் அக்சார் பட்டேல் 17 இடங்கள் முன்னேறி 194 புள்ளிகள் உடன் 13-வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு பந்து வீசுவதில்.. மிகவும் வெறுப்பான பகுதி இதுதான்.. ரொம்ப சோதிப்பாரு – ஆஸி லெக் ஸ்பின்னர் பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 7 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிகாரப்பூர்வமாக 100 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார். 143 இடங்கள் முன்னேறிய அவர் 371 ரேட்டிங் புள்ளிகள் உடன் 96வது இடத்திற்குள் நுழைந்திருக்கிறார். இதில் முதல் 10 இடங்களுக்குள் குல்தீப் யாதவ் 637 புள்ளிகள் உடன் பந்துவீச்சாளர் தரவரிசையில் தற்போது 6வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






