டெல்லிக்கு எதிராக கடைசியில் நின்று ஆட்டத்தை வென்ற பின் தோனியிடம் டிப்ஸ் வாங்கினேன் – அதிரடி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பேச்சு

0
74
MS Dhoni Finisher CSK

உலகின் மிகச்சிறந்த டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கான முதல் ப்ளேஆப்ஸ் போட்டியின் சேஸிங்கில், 19-வது ஓவரில் அரைசதம் தாண்டி அடித்திருந்த முக்கிய வீரர் ஆட்டமிழக்க, அவர் களமிறங்குகிறார்!

களமிறங்கிய அவர் அந்தத் தொடரில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய தொடரிலும் தன் பேட்டிங் பார்மை இழந்திருந்தார். இதைவிட முக்கியமான விசயம், அந்தத் தொடரில் சிறப்பான பார்மில் இருந்த வீரருக்கு முன், நெருக்கடியான அந்த நேரத்தில் களமிறங்கியதுதான்!

- Advertisement -

அவரது இரசிகர்களே ‘இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று மனதிற்குள் நினைத்திருப்பார்கள். அவரைப் பிடிக்காதவர்கள் அந்த நேரத்தில் என்னென்ன பேசியிருப்பார்களென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் தேவையே இல்லாமல் அந்த நெருக்கடிக்குள் வலிந்து குதிக்கிறார்!

எதிர் முனையில் இருந்தவர் ஆடி இவருக்கு பேட் செய்ய வாய்ப்பு வந்தபோது 9 பந்துகளில் 19 ரன்கள் தேவை. சந்தித்த முதல் பந்தை கணிக்க முடியாமல் தவற விடுகிறார். பார்த்தவர்கள் அத்தனைப் பேர் முகத்திலும் வெற்றியைப் பற்றியான அவநம்பிக்கையின் களை!

ஆனால் அடுத்து ஷார்ட்-டெலிவரியாக ஆப்-ஸ்டம்ப் வெளிய வீசப்பட்ட பந்தை ஓங்கி அறைகிறார். எல்லா பேட்டிங் அணி இரசிகர்களையும் மகிழ்விக்கும், பந்து பேட்டில் சரியான இடத்தில், சரியான நேரத்தில் படுகிற சத்தம் ஸ்டம்ப் மைக் வழியாகக் கேட்கிறது. அதேநேரத்தில் டீப்-பாயிண்ட் புறமாய் பெரிய பவுண்டரியை தாண்டி பந்து சிக்ஸராய் மாறுகிறது. அடுத்த பந்தை மீண்டும் தவறவிடுகிறார் மீண்டும் சலிப்புணர்வு அவர் இரசிகர்களின் புறத்திலிருந்து மெளனமாய் வழிகிறது!

- Advertisement -

20வது ஓவர் ஆரம்பிக்க வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. வேறொரு முக்கிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கிலிருக்க அந்த அணியின் இரசிகர்களிடம் இப்போது நம்பிக்கை துளிர்க்கிறது. ஆனால் முதல் பந்திலேயே அந்த முக்கிய பேட்ஸ்மேன் ஆட்டமிழக்க, இவரே ஸ்ட்ரைக்கிற்கு திரும்ப வருகிறார். மைதானத்தில் மீண்டும் அந்த அணியின் இரசிகர்கள் மத்தியில் உற்சாகமும், நம்பிக்கையும் வடிந்துபோகிறது.

ஆனால் அவர் இந்த முறை எந்த திருப்பங்களையும் வைக்கவில்லை. இரண்டாவது பந்தில் பவுண்டரி. மூன்றாவது பந்தில் பவுண்டரி. நான்காவது பந்து வைட். மீண்டும் வீசப்பட்ட நான்காவது பந்தில் பவுண்டரி. ஆட்டத்தை எந்தவித நகக்கடிப்புகளும் இல்லாது இரண்டு பந்துகள் மீதமிருக்கும் போதே 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்து முடித்துவிட்டார்.

இதை எதிரணியிலிருந்து அவர் ரோலை, தன் தேசிய அணிக்கும் செய்யும், இளைஞனொருவன் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான். ‘இவர் ஏன் பார்மில் இல்லாத பொழுது, பார்மில் ஒரு ப்ளேயர் இருக்கும் பொழுது, இவ்வளவு பெரிய அழுத்தத்தை தானாக வந்து சுமக்கிறார்’ என்று!

அந்த டி20 தொடர் 2021 ஐபிஎல். பார்மில் இல்லாது வந்து அடித்தவர் மகேந்திர சிங் தோனி. பார்மில் இருந்தவர் ஜடேஜா. அந்நேரத்தில் ஆட்டமிழந்த இரு முக்கிய விக்கெட்டுகள் ருது-மொயீன். எதிரணி டெல்லி. அவரை ஆச்சரியமாய் பார்த்தவர் அவரைப் போலவே பினிசர் ரோல் செய்யும் இடத்தில் ஆடக்கூடிய ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்!

போட்டி முடிந்த உடன் தோனியிடம் அவர் பினிசிங் பற்றி கேட்டுத் தெரிந்துக்கொண்டதை இவ்வாறாக பகிர்கிறார்.

“தனி ஆளாக நின்று அவர் ஆட்டத்தை முடித்த அன்று நான் அவருடன் பேசினேன். அவரின் ஆட்ட நடைமுறைகள் என்ன? அவர் ஆட்டத்தை எப்படி அணுகுகிறார்? ஆட்டத்தில் உணர்வுகளை எப்படிக் கையாள்கிறார்? என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவருக்காக நான் பேசுவதைச் சிலசமயங்களின் மோசமாய் உணர்ந்தாலும், இதற்குள் நிறைய இருக்கிறது. ஆகவே நாங்கள் பேசிக்கொண்டதைப் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவரிடம் பினிசிங் பற்றி கேட்க, அவர் அதற்கு சுருக்கமாக “நாம் எடுத்துக்கொண்ட வேலைக்கு நாம் முழுப்பேற்று நின்று முடிக்க வேண்டும். அதை முடிப்பதற்கு வேறு வேறு வழிகள் இருக்கலாம். ஆட்டத்தின் முடிவில் முடிக்கலாம். 18-வது ஓவரில் முடிக்கலாம். ஆனால் நாம் இருந்து முடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார்”

வெற்றி எப்போது வந்தாலும் வெற்றிதான். நமக்குக் கொடுக்கப்பட்டது பினிசர் ரோல் என்றால், நாம் நின்று முடிப்பதுதான் முக்கியம். வெற்றி எந்த ஓவரில் வந்தது என்பது அல்ல என்பதுதான் மகியின் சக்ஸஸ் பார்முலா!