ஐ.பி.எல் தொடர் முடிவடைந்து அடுத்து இந்தியா வரும் தென்ஆப்பிரிக்கா அணியோடு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தத் தொடரின் ஐந்து போட்டிகளில் முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஜூன் 12ஆம் தேதி கட்டாக் நகரின் பராபதி மைதானத்திலும், மூன்றாவது போட்டி ஜூன் 14ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரின் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்திலும், நான்காவது போட்டி ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட் நகரின் சவுராஷ்ரா கிரிக்கெட் அசோசேசியன் மைதானத்திலும், ஐந்தாவது போட்டி ஜூன் 19ஆம் தேதி பெங்களூர் நகரின் எம்.சின்னசுவாமி மைதானத்திலும் நடக்க இருக்கிறது. எல்லாப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு ஏழு மணிக்குத் துவங்குகிறது.
இந்தத் தொடர் இந்திய அணியைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தொடராகவே பார்க்கப்படுகிறது. காரணம், கடந்து ஆண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்ற தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 எனவும், ஒருநாள் தொடரை 0-3 எனவும் இழந்து வெறுங்கையோடே நாடு திரும்பியது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் தொடராக இது அமையுமென்று இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதேசமயத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள அணியில், மீண்டும் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்று உள்ளனர். மேலும் ஐ.பி.எல்-ல் வேகப்பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் இருபது ஓவர் உலகக்கோப்பை நடைபெறுவதாலும், இந்தத் தொடர் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் வேகப்பந்து வீச்சில் மிரட்டி 14 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்ஆப்பிரிக்க அணியுடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள உம்ரான் மாலிக் குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணிக்கு ஐ.பி.எல் தொடர் சிறப்பான ஒன்றாய் இருக்கிறது. உம்ரான் மாலிக் சிறப்பான திறமை வாய்ந்தவர். அவர் ஐ.பி.எல் தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை சர்வதேச போட்டிகளிலும் தொடருவார் என நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்!