இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்த மாதத்தில் இந்தியா வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.
இதற்கு தயாராகும் விதமாக இந்திய சூழ்நிலையை ஒத்து அமைந்துள்ள யுனைடெட் அரபு எமிரேட்டில் அபுதாபியில் ஒன்பது நாட்கள் தங்கி இருந்து இங்கிலாந்து பயிற்சி பெறுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 65 ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களைப் போல தயார் செய்யப்படுகின்றன. இதற்கு நான்கு தரமான மைதானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேலும் வலை பயிற்சி செய்வதற்கு என தனியாக 22 பயிற்சி ஆடுகளங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பாக எந்த ஒரு அணியும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை எதிர் கொள்வதற்காக இவ்வளவு பிரமாண்டமான பயிற்சி ஏற்பாடுகளை, இப்படி ஒரு திட்டத்துடன் அணுகியது கிடையாது.
மேலும் இந்த டெஸ்டை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் லீச் உடன் ரேகா அஹமத், பசீர் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகிய மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெரிய அனுபவம் கிடையாது.
இதில் 24 வயதான இடது கை சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி கூறும்பொழுது ” இங்கிலாந்து நிலைமைகளுக்கு இந்திய நிலைமை முற்றிலும் மாறுபட்டது. இந்திய நிலைமையில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு சென்று என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று மக்கள் அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி யாராவது நம்பிக்கை வைப்பது அற்புதமான ஒன்று.
நான் இந்தியா சென்று விளையாடுவதற்கு மிகவும் ஆவலோடு இருக்கிறேன். என்னால் காத்திருக்க முடியவில்லை. என்னுடைய கவுண்ட்டி சாம்பியன்ஷிப் பந்துவீச்சு புள்ளி விவரங்கள் சிறப்பாக இருக்காது. ஆனால் நான் அக்சர் மற்றும் ஜடேஜா போல பந்துவீசுகிறேன்.
நான் தற்பொழுது அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் என்ன மாதிரி பந்து வீச வேண்டும் என்கின்ற உணர்வுடன் செல்கிறேன். வெள்ளைப் பந்தில் பேசுவது போலத்தான் இந்தியாவில் சிவப்பு பந்தில் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தியா பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள் என்கின்ற காரணத்தினால், நான் எதையும் கடினமாக வைத்துக் கொள்ளாமல் மிக எளிமையாக வைத்துக் கொள்ளப் போகிறேன்.
இந்தியாவின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் போல என்னால் செயல்பட முடியுமா என்று தெரியாது. அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய சண்டை இருக்கும். ஆனால் நான் ஒரு முக்கிய ஸ்பின்னர் ஆக விளையாட போவதில்லை. இதனால் என் மீது எந்த அழுத்தமும் இருக்காது” என்று கூறி இருக்கிறார்.