ஈஸியான விஷயம் இப்பயே ஓய்வுன்னு சொல்றது, ஆனால் நான் அடுத்த சீசன் வந்தால் சென்னை ரசிகர்களுக்கு என்னோட கிஃப்டா இருக்கும்… எனக்கு இப்படியொரு கஷ்டம் உள்ளது! – தோனி உருக்கமான பேட்டி!

0
4579

‘ஒன்பது மாதங்கள் உழைத்து, அடுத்த சீசன் வருவது எனக்கு சற்று கடினமாக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது கிஃப்டாக இருக்கும்.’ உருக்கமாக பேட்டியளித்தார் தோனி.

அகமதாபாத்தில் நடைபெற்ற பைனலில், குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது சொந்த மைதானத்தில் அபாரமான பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இலக்கையும் நிர்ணயித்தது.

- Advertisement -

இன்னிங்ஸ் நடுவே தீவிரமாக மழை பெய்து நின்றதால் போட்டி நடைபெற தாமதமானது. இறுதியாக போட்டி 15 ஓவராக மாற்றப்பட்டது. 15 ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் புதிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ருத்துராஜ் மற்றும் கான்வே இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ரகானே, ராயுடு இருவரும் அபாரமாக விளையாடிகொடுத்து ஆட்டம் இழந்தனர். சிவம் துபே கடைசி வரை நின்று நம்பிக்கை அளித்தார். கடைசியில் வந்த ஜடேஜா ஒரு சிக்ஸ் மற்றும் பௌண்டரி அடித்து மிகச் சிறந்த பினிஷ் செய்து கொடுத்தார். சிஎஸ்கே அணி அபாரமாக வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பை தூக்கியது.

கோப்பை மற்றும் வெற்றிக்கான பரிசுத்தொகையை பெற்ற பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசுகையில், “(ஓய்வு குறித்து கேட்டபோது) என்னிடம் பதிலை எதிர்பார்க்கிறீர்களா? என்னுடைய ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இதுதான் சரியான தருணம். நான் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு மற்றும் ஈர்ப்பு அனைத்திற்கும் “நன்றி” எனக்கு கூறுவது எளிதாக இருக்கும். ஆனால் அடுத்த 9 மாதங்கள் கடின உழைப்பைக் கொடுத்து இன்னொரு சீசன் விளையாடுவது தான் கடினமான விஷயம். ஒருவேளை விளையாடினால், அது நான் ரசிகர்களுக்கு கொடுக்கும் அன்பு பரிசாக இருக்கும். கடினமாக தான், இருப்பினும் அது நான் கொடுக்கும் பரிசு. இதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 6-7 மாதங்கள் உள்ளது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்பிற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்.

- Advertisement -

(இன்று உணர்ச்சிவசமாக காணப்பட்டது குறித்து) என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். ஆகையால் எனக்கு இதெல்லாம் உணர்ச்சிகரமாக இருக்கும் அல்லவா. இந்த சீசனின் முதல் போட்டியில் நாங்கள் இங்கே விளையாடியபோது, பேட்டிங் செய்ய களமிறங்கினேன். ரசிகர்கள் அளவு கடந்து எனது பெயரை கரகோஷமிட்டார்கள். அந்த தருணத்தில் என் கண்ணில் கண்ணீர் நிரம்பியது. ஆகையால் சில வினாடிகள் டக் அவுட்டில் நின்றுவிட்டு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திவிட்டு மீண்டும் உள்ளே சென்றேன். இவர்கள் கொடுக்கும் அன்பை நான் என்ஜாய் செய்வேன். அதேபோல் சென்னை மைதானத்திலும் இப்படி நடந்தது. அளவு கடந்த அன்பை கொடுக்கிறார்கள்.

(ரசிகர்கள் எப்படி உங்கள் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்?) நான் நானாகவே இருப்பதே கண்டு அவர்கள் என் மீது இத்தனை அன்பு செலுத்துகிறார்கள். நான் விளையாடும் கிரிக்கெட்டை எல்லோராலும் விளையாட முடியும். என்னாலும் இப்படி விளையாட முடியும் என்று நினைத்து அவர்களை என்னோடு சம்மந்தப்படுத்துவதால், என்னை அவர்களில் ஒருவராக பார்க்கிறார்கள். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் என்னை மற்றவர்கள் போல காட்டிக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய திட்டங்களை நான் எளிமையாக வைத்துக்கொள்கிறேன். அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் பேட்டிங் சிறப்பாக அமைந்தது தான். வீரர்கள் தவறு செய்வதைக்கண்டு எனக்கும் வெறுப்பாகும். நானும் மனிதன் தான். ஆனால் போதுமானவரை நான் அவர்களது இடத்தில் நின்று யோசிப்பேன். அப்போது, எதனால் இப்படி செய்தார்கள்? என்று என்னால் உணர முடிகிறது. அழுத்தம் அதிகமாக இருக்கும் பைனல் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் சில நேரங்களில் இப்படி தவறுகள் நேர்வது இயல்பு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

(ராயுடு பற்றி) ராயுடுவிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் என்னவென்றால், அவர் மைதானத்திற்குள் இருக்கும்பொழுது தன்னுடைய 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடியவர். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். பல வருடங்களாக நான் அவருடன் இணைந்து விளையாடி வருகிறேன். இந்தியா ஏ அணிக்கு விளையாடிய காலத்தில் இருந்தே இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறோம். வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு இரண்டையும் அபாரமாக விளையாடக்கூடிய வீரர். இன்று கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தேன். பைனலில் அவர் விளையாடியதை எப்போதும் மறக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவரை நினைத்து மகிழ்ச்சியையும் அடைகிறேன். மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றுள்ளார். அடுத்து வரவிருக்கும் வாழ்க்கையும் அவருக்கு நன்றாக அமைய வேண்டும்.” என்று தோனி பேசினார்.