நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடையே நடைபெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து எட்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள்.
தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஹெட் 62 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா வெல்வதற்கு எளிமையான வகையில் பாதை அமைக்கப்பட்டது. இறுதியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்தியாவுக்கு அடுத்தபடியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட அணியாக தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. இந்த முறை நாட் அவுட் போட்டியில் தடுமாறுவதை திருத்தி எழுதி தென் ஆப்பிரிக்கா புதிய சரித்திரம் படைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அவர்கள் என்ன செய்வார்களோ அதையே செய்து மீண்டும் தோற்றார்கள்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ராப் வால்டர் இறுதிப் போட்டி குறித்து பேசும் பொழுது ” நான் இறுதிப் போட்டியை பார்க்க ஒரு சதவீதம் வாய்ப்புதான் இருக்கும். வெளிப்படையாக உண்மையைச் சொல்வது என்றால் இரண்டு அணிகளில் யார் வென்றாலும் கவலை கிடையாது.
ஆனால் உலகக் கோப்பைகளில் கடந்த காலங்களில் தொடரை நடத்தும் அந்த நாட்டின் அணி வெற்றி பெறுவது நடக்கிறது. கடந்த எட்டு வாரங்களில் இந்திய அணிக்கு எப்படியான ஆதரவு இருந்தது என்பதை நாங்கள் பார்த்தோம். மேலும் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். சொந்த நாட்டு அணி வெல்வது நல்லது.
கடந்த எட்டு வாரங்களாக நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அது மறக்க முடியாதது. மேலும் நிறைய வீரர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததால் அது உற்சாகமான ஒன்றாக இருந்தது. உலகெங்கும் நாங்கள் உலக சாதனைகள் படைத்திருக்கிறோம். எங்கள் வீரர்கள் தற்பொழுது சோர்வடைந்து இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!






