இன்றைய கிரிக்கெட் உலகில் மிகவும் மதிப்பு மிகுந்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி இருந்து வருகிறார். அவருடன் ஒவ்வொரு வடிவத்தில் ஒரு சில வீரர்களை மட்டும் ஒப்பிட முடியும். ஆனால் மூன்று வடிவத்திலும் சேர்த்து அவருடன் ஒப்பிடுவதற்கு வீரர்களே கிடையாது.
தற்போதைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை கொண்டு இருக்கக்கூடிய ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான். கால்பந்து ஆட்ட வீரர்களுக்கு இருக்கும் புகழ் தற்போது ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலிக்கு இருக்கிறது.
மேலும் விராட் கோலி உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு வரும் இளைஞர்களுக்கு உடல் தகுதி குறித்த உதாரணமாக இருந்து வருகிறார். இளைஞர்கள் விராட் கோலியை பின்பற்றி உடல் தகுதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். இதுகுறித்து விளையாட்டு உடற்பயிற்சியாளர்கள் விராட் கோலியை பாராட்டி கூறியிருக்கிறார்கள்.
இதே போல் விராட் கோலியின் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு மற்ற எந்த வீரர்களை விடவும் இன்னொரு மடங்கு மிக அதிகமாக இருக்கும். தற்பொழுதும் இந்திய அணியில் முதல் ஆளாக பயிற்சிக்கு வந்து கடைசி ஆளாக வெளியே போவதுதான் விராட் கோலியின் வழக்கம். மேலும் விளையாடும்போது களத்தில் மொத்த வீரர்களுக்கும் ஒற்றை ஆளாக ஊக்க சக்தியாக இருப்பார்.
விராட் கோலி தன் தொழில் முறை கிரிக்கெட் வாழ்வு குறித்து பேசும் பொழுது “எனது ஒரே கவனம் என்னவென்றால், சிறப்பாக செயல்பட வேண்டும், கடினமான சூழ்நிலைகளில் அணி இருக்கும் பொழுது ஆட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
இதற்காக நான் ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். என்னிடம் எப்போதும் ஒரு உந்துதல் இருந்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட்டுக்கான திறன் இப்போது போல் ஆரம்பத்தில் இல்லை.
இப்போது நான் எப்படி கவனத்தை ஒரு பக்கமாக குவித்து, ஒரே மனதுடன் எனது திறமையை பயன்படுத்தி விளையாடுகிறேனோ, இதுவெல்லாம் நான் கிரிக்கெட் வாழ்வுக்காக கொடுத்த அர்ப்பணிப்புக்கு கிடைத்தது.
சத்தியமாக நான் மைதானத்தில் இருந்து கற்றுக் கொண்டது இதுதான். மைதானத்தில் 100க்கு 100% கொடுத்து விளையாடினேன். அதிலிருந்து எல்லாம் எனக்கு கடவுள் கொடுத்தது. ஆனால் நான் இந்த அளவிற்கு விஷயங்கள் வெளியில் வரும் என்று நான் நினைத்தது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்,






