இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது!
தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டுள்ள இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அந்த நாட்டிற்கு செல்கிறது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி அக்டோபர் 30-ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட்டாக ஆரம்பிக்கும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தில் நடைபெறுவதால் உலகக் கோப்பை தொடருக்கு மிகவும் உதவியான தொடராக இருக்கும். இதற்கடுத்து இந்திய மண்ணில் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது!
தற்பொழுது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் காயம் அடைந்துள்ள முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு நான்காம் இடத்தில் விளையாடக்கூடிய வீரராக யார் இருப்பார்கள்? இரண்டாவது விக்கெட் கீப்பராக யார்? என்கின்ற கேள்வியும் பிரதான கேள்வியாக இருக்கிறது. இதற்கும் பதில் கிடைத்துவிடும் என்பதால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு மிக முக்கியமானது.
தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா “திலக் வர்மா மிகவும் பொறுப்பாக இருக்கக்கூடிய இளைஞர் என்று நாங்கள் அறிவோம். நேற்று இந்திய அணிக்கு இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய விதம், அவர் எப்படி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று நீங்கள் பார்த்தீர்கள். இது மிகவும் நன்றாக இருக்கிறது.
இதற்கு அடுத்து அவர் கையில் பந்து கிடைத்த பொழுது அதிலும் அவர் முயற்சி செய்தார். முதலில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு ஏறக்குறைய இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றும் முயற்சியில் ரிட்டர்ன் கேட்சை தவறவிட்டார். மேலும் அவர் இடது கை வீரர் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
நிச்சயமாக இந்திய தேர்வாளர்களால் அவரது பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் நீண்ட காலம் அணிக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வீரரை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். அவர் தனது தோள்களில் ஒரு நிலையான தலையைப் பெற்று இருப்பது போல் தெரிகிறது. அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர் ஒரு பிரகாசமான பாதையில் மிகச் சிறப்பாக தன் வேலையை செய்கிறார். அவர் இந்திய அணியில் மேற்கொண்டு இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!