கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“இவர் இந்திய அணிக்கு அடுத்த சில ஆண்டில் முக்கியமான வீரராக இருப்பார்!” – தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி அடித்துச் சொல்லும் ரஷீத் கான்!

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது!

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தனது மூன்றாவது ஐபிஎல் சதத்தை அடித்து அசத்தினார். இந்த மூன்று சதங்களும் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு வந்திருக்கிறது!

இரண்டாவது விக்கெட்டுக்கு இவருடன் கூட்டணி சேர்ந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடிய கில்லுக்கு அருமையான ஒத்துழைப்பு தந்தார். அவருடன் சேர்ந்து 138 ரன் பார்ட்னர்ஷிப்பில் கலந்து கொண்டார்.

இறுதியாக 31 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 ரன்கள் அவர் எடுத்திருந்த பொழுது ரசித் கான் உள்ளே வரவேண்டியதற்காக ரிட்டையர்டு அவுட் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதுவரை இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 411 ரன்களை 41 ரன் சராசரியில் அடித்திருக்கிறார். இவரது சீரான பேட்டிங் திறமை குறித்து பலரும் வியந்து வருகிறார்கள்.

நேற்றைய போட்டிக்கு பின் தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி பேசிய குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான்
“சாய் சுதர்சன் ஒரு நம்ப முடியாத வீரர். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்திய அணிகளும் ஒரு முக்கியமான வீரராக இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை அவர் இந்த ஆண்டு விளையாடிய விதத்தில் மட்டும் அல்லாமல், கடந்த ஆண்டு முதல் நாள் அவர் வலைகளில் விளையாடிய பொழுதே அவர் மிகத் திறமையானவராக தெரிந்தார்.

அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரது மனநிலை, அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வது, அவரது கடினமான உழைப்பு என அவர் மிகவும் வித்தியாசமானவர். அடுத்த சில ஆண்டுகளில் சாய் சுதர்சன் இந்திய அணியில் முக்கியமான வீரராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

Published by