இவர் பாகிஸ்தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்து விடுவார் – தன்வீர் அஹமத் அதிரடிப் பேச்சு

0
2408
Tanvir Ahmed Pakistan Team

பாகிஸ்தான் கிரிக்கெட்டை, பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு முன், உலக கிரிக்கெட் நாடுகள் பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் விளையாட சுற்றுப்பயணம் செய்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இதனால் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டும் வளர்ந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள்.

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து, கிரிக்கெட் விளையாடும் பெரிய நாடுகள் யாரும் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்யாததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குப் பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட்டை வளர்ப்பதிற்கான நிதி கிடைக்காமல், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்குத் திறமையான வீரர்கள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்து, மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய பின்பு, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நல்ல மாற்றங்கள் நிகழ துவங்கியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் தொடரை நடத்துவது போல, பி.எஸ்.எல் என்ற கிரிக்கெட் தொடரையும் நடத்தி வருவது, ஓரளவிற்கு வருமானத்தை தந்து வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருந்த நேரத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இருபது உலகக்கோப்பையில் இந்திய அணியைத் தோற்கடித்தது, ஆஸ்திரேலிய அணியை வரவழைத்து கிரிக்கெட் தொடரை பாதுகாப்பாக நடத்தியது என சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். ஆனால் சமீபத்தில் பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக, ஜூனியர் பி.எஸ்.எல் இருபது ஓவர் போட்டி தொடரை நடத்துவது என்கிற அவரது முடிவு, பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகிறது.

இதை முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் எதிர்த்திருக்க, தற்போது தன்வீர் அகமத் என்கின்ற பாகிஸ்தான் வீரரும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். தனது பேச்சில் அவர் “ரமீஸ் ராஜா பாகிஸ்தானின் கிரிக்கெட்டை அழித்துவிடுவார். உலக கிரிக்கெட் நாடுகளிலிருத்து இருபது ஓவர் போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் பாதிப்படைந்துவிட்டது என்று பேசிவரும் நிலையில், ரமீஸ் ராஜா 19வயது இளம் வீரர்களை வைத்து, இருபது ஓவர் ஜூனியர் பி.எஸ்.எல் நடத்துவது என்று தீர்மானித்திருப்பது நல்லதல்ல. இது இளம் வீரர்களின் கிரிக்கெட் சிந்தனைகளை, அவர்களுது கவனத்தை, உடற்தகுதியைத் அளித்து விடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக வரும் ஒவ்வொருவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஒவ்வாத யோசனைகளோடே வருகிறார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்!