நேற்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கில் 80 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் கேப்டன் வில்லியம்சன் 69, டேரில் மிட்சல் 134 ரன்கள் என இருவர் மட்டுமே ஸ்கோர் எடுக்க, 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை எடுத்து இந்திய அணி 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. கடந்த இரண்டு உலகக்கோப்பைகளாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்திருந்தது.
மேலும் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி தமக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்ததாக வெளியில் இருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, தற்பொழுது அது சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்தியாக மாறி இருக்கிறது. இது குறித்து கில் இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
கேள்வி : ஆடுகளம் குறித்த சில சர்ச்சைகள் எழுந்தன. இது இந்திய அணியை இல்லை இந்திய அணியின் யாராவது வீரர்களை பாதித்ததா? நீங்கள் இது சம்பந்தமாக உங்களுக்குள் பேசிக் கொண்டீர்களா?
கில் : நீங்கள் சொல்லிதான் ஆடுகளம் குறித்த சர்ச்சை ஏற்பட்டு இருப்பதை அறிகிறேன். அப்படி என்ன சர்ச்சை ஏற்பட்டது?
கேள்வி : நீங்கள் தற்பொழுது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடி இறுதிப் போட்டிக்கும் வந்து விட்டீர்கள். வில்லியம்சன் மற்றும் மிட்சல் இருவரும் இலக்கைத் துரத்தும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்? அணி அதை எப்படி சமாளித்தது?
கில் : விளக்குகளின் கீழ் சவாலாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். பந்து பழையதாகி விட்டால் ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதும் தெரியும். ஆனால் எங்களுக்கு மிக முக்கியமானது நாங்கள் தொடர்ந்து விரும்பும் பகுதியில் பந்து தொடர்ந்து வீச வேண்டும். அப்படி செய்து அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம்.
ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் சென்றது. இவ்வளவு பெரிய ரன்னை துரத்தும் பொழுது அது சவால் ஆனது என்று தெரியும். எங்காவது இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் எல்லாம் மாறிவிடும். அதனால் நீங்கள் எப்பொழுதும் ஆட்டத்தில் இருக்கிறீர்கள். இதுதான் நடந்தது!






