இந்தியா – இங்கிலாந்து பயிற்சி டி20 : சாம்சன் & சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ; அதிரடி அரை சதம் விளாசி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்த ஹர்ஷல் பட்டேல்

0
637
Harshal Patel fifty vs Northamptonshire

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் டி20ஐ தொடருக்கு முன் 2 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியை வழி நடத்துகிறார். முதல் போட்டியில் டெர்பிஷயர் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. நார்தாம்ப்டன் மைதானத்தில் நடந்த அடுத்தப் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற நார்த்தாம்டன்ஷையர் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேறினார். வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த ராகுல் திரிப்பாதிக்கு இம்முறை அணியில் இடம் கிடைத்தது. ஆனால் முதல் வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட தவறிவிட்டார். 11 பந்தில் 7 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மும்பை அணியின் செல்ல வீரர்களான இஷான் கிஷன் 16 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஓரளவு நிலைத்து ஆடிய தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகள் & 1 சிக்ஸர் உட்பட 34 ரன்கள் சேர்த்துவிட்டு கிளம்பினார். 72/5 என பரிதவித்த இந்திய அணியை வெங்கடேஷ் ஐயர் – ஹர்ஷல் பட்டேல் ஜோடி காப்பாற்ற முயற்சித்தது.

- Advertisement -

இவர்களது பார்தனர்ஷிப் மூலம் இந்திய அணிக்கு 50 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய ஹர்ஷல் பட்டேல் 150 ஸ்டிரைக் ரேட்டில் அபார பேட்டிங்கை வெலிக்காட்டினார். 36 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரி & 3 சிக்ஸர்கள் என மொத்தம் 56 ரன்கள் விளாசினார். ஏற்கனவே பல முறை ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட் செய்து தனக்குள் பேட்டிங் திறன் இருப்பதை காட்டியுள்ளார். தற்போது இந்திய அணிக்காக முக்கியமான கட்டத்தில் பங்காற்றி அதை நிரூபித்துள்ளார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் அடித்தது. அடுத்துக் களமிறங்கிய நார்த்தாம்டன்ஷையர் அணி 19.3 ஓவர்களிலயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ரும்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை பந்துவீசிய அனைவருமே விக்கெட்டுடன் திரும்பினர். ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் & சாஹல் தலா 2 விக்கெட்டுகளும் வெங்கடேஷ் ஐயர் & பிரஷித் கிருஷ்ணா ஆளுக்கொரு விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தியா – இங்கிலாந்து பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறது.

- Advertisement -
- Advertisement -