கடந்த சனிக்கிழமை உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக்கின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அப்பொழுது இந்திய அணியினர் செய்த ஒரு வெற்றி கொண்டாட்டம் பெரிய சர்ச்சையாக மாறியது. தற்பொழுது இதற்கு ஹர்பஜன் சிங் விளக்கம் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என ஆறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்காக விளையாடும் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் கடந்த வாரங்களில் இங்கிலாந்தில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர்கள் இந்த தொடரை வென்று தங்கள் நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார்கள். காரணம் கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வி அடைந்திருந்தது.
இந்த நிலையில் இந்திய அணி அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்குப் பிறகு இந்திய அணியின் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் டிரெஸ்ஸிங் ரூமில் ஊனமுற்றவர்கள் போல நடந்து வெற்றியைக் கொண்டாடினார்கள். இது அப்படியானவர்களை கேலி செய்வது போல இருப்பதாக சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவானது.
தற்போது இதற்கு ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்து இருப்பதுடன் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் தொடரை வென்ற பிறகு ஈடுபட்ட வெற்றி கொண்டாட்டம் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் செய்யும் விமர்சனத்திற்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் யார் உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதரையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
இதையும் படிங்க : மழையால் இனி கவலை இல்லை.. புதுமையான கிரிக்கெட் ஸ்டேடியத்தை தயார் செய்யும் ஆஸ்திரேலியா.. இதுவரை இல்லாத சிறப்பம்சங்கள்
நாங்கள் 15 நாட்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினோம். எனவே தொடரை வென்ற பிறகு உடல் எவ்வளவு தளர்ந்து இருக்கிறது என்பதை காட்டுவதற்காக நாங்கள் அப்படி நடந்து அதை வெளிப்படுத்தினோம். நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சி செய்யவில்லை. இன்னும் மக்கள் யாராவது இதை தவறாக நினைத்தால் எங்களை மன்னிக்கவும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்.அனைவருக்கும் என்னுடைய அன்பு” என்று கூறி இருக்கிறார்.






