வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் நமன் தீர் சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஹனுமா விகாரி தனது அதிருப்தியை தெரிவித்து பேசி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடப்பதால், இந்திய ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் நமன் தீர் முதன்முறையாக இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் டி20 லீக்கில் அபாரமாக விளையாடிய போதிலும், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரது உள்நாட்டு போட்டி புள்ளிவிவரங்கள் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. எனினும், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் பந்துவீசும் திறன் இல்லாததால், பகுதிநேர ஆஃப்ஸ்பின் பந்துவீச்சாளரான நமன் தீர் அணிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து ஹனுமா விகாரி பேசும்போது “ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு நமன் தீர் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகவும் ஷாக்கிங் ஆக இருக்கிறது, இதில் எனக்கு பல டவுட்ஸ் உள்ளது. அவரது டொமஸ்டிக் நம்பர்ஸ் பெரிய அளவில் கன்வின்சிங் ஆக இல்லை. அவர் பஞ்சாப் லீக்கில் ஒரு பெரிய நாக் ஆடியிருக்கலாம், ஆனால் அவரது பெர்ஃபார்மன்ஸ் அப் அண்ட் டவுனாகத்தான் இருந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “இந்திய அணியின் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களில் பந்துவீசக்கூடிய ஆல்ரவுண்டர் யாரும் இல்லாத நிலையில், நமன் தீர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடியவர் என்பதால் மட்டுமே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.