196 ரன்.. தமிழக வீரரின் அசத்தல் பேட்டிங்.. ரோஹித் பாண்டியா ஏமாற்றம்.. 36 ரன்னில் தோல்வி.. தொடரும் மும்பையின் சோகம்

0
277

ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 9வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

குஜராத் மும்பை மோதல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா திரும்பவும் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார். டாஸ் வென்று பாண்டியா பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் குஜராத் அணி முதலில் பேட்டிங் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் குஜராத் அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். இதில் நன்றாக விளையாடிய கில் 27 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் குவித்தார்.

அதற்கு அடுத்தது களம் இறங்கிய ஜாஸ் பட்லர் 24 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க, தொடக்க வீரன் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 63 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

குஜராத் அணி வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நான்கு பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். மேலும் மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 6 ரன்னில் முகமது சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்கு பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்த மும்பை அணியை மீட்டெடுத்தனர்.

இதையும் படிங்க:300 ரன்கள் இலக்கை நீங்கதான் செட் பண்றீங்க.. இது நடக்கலனா அதுக்கு வாய்ப்பு இல்ல – முத்தையா முரளிதரன்

மேலும் ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால், குஜராத் பந்துவீச்சாளர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். 36 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 39 ரன் மற்றும் சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 11 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு களமிறங்கிய வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே குவித்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 18 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மும்பை அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகவும் குஜராத் அணிக்கு இது முதல் வெற்றியாகவும் அமைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குஜராத் அணிக்கு எதிராக விளையாடி வரும் மும்பை அணி நான்கு முறையும் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -