இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி காமன் சென்ஸ் உடன் விளையாட வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜாப்ரி பாய்காட் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி வழக்கமான பாஸ்பால் முறையில் விளையாடுமா அல்லது பாரம்பரிய டெஸ்ட் முறையில் விளையாடுமா? என்பது பெரிய கேள்வியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்று சைக்கிள்களின் இறுதிப்போட்டியும் இங்கிலாந்தில் நடைபெற்று இருக்கிறது. ஆனால் ஒரு இறுதிப் போட்டிக்கு கூட இங்கிலாந்து அணி தகுதி பெறவில்லை. அந்த அணி மிகவும் சுவாரசியமாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது. ஆனால் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவதில்லை என்கின்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜாப்ரி பாய்காட் கூறும் பொழுது “பாஸ்பாலை நிதானப்படுத்தி, கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி இங்கிலாந்து அணி இந்திய அணியை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். சில நேரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சிலிர்ப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் பொறுப்பற்ற பேட்டிங் காரணமாக டெஸ்ட் போட்டிகளை இழந்து விட்டார்கள்”
“இங்கிலாந்து அணியின் நோக்கம் வெற்றி பெறுவதில் தான் இருக்க வேண்டும். கடந்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றன. ஆனால் ஒன்றில் கூட இங்கிலாந்து அணியால் விளையாட முடியவில்லை. இதற்காக இங்கிலாந்து அணி வெட்கப்பட வேண்டும். நீங்கள் சிறப்பானவர்கள் என்று எங்களிடம் கூறுவதால் எந்த பயனும் இல்லை. அடுத்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உங்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : நல்ல வேளை கோலி விளையாடல.. இதை செஞ்சிருந்தா அவரோட தரமே காணாமல் போய்இருக்கும் – ஆஸி கில்கிறிஸ்ட் கருத்து
“தற்போது ஒரு புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் துவங்குகிறது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வளவு பொழுது போக்காக விளையாடுகிறோம் என்பதை விட வெற்றி பெறுவது தான் முக்கியம் என்பதை இங்கிலாந்து அணிக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவதுடன், ரசிகர்களை பொழுதுபோக்காக வைத்துக் கொள்ள முடிந்தால் அது ஒரு பிளஸ் ஆக இருக்கும். ஆனால் அதற்காக மட்டுமே விளையாடக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.