நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த நிலையில் அவரது கேப்டன்சி குறித்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் போன்றவர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். தற்பொழுது அதற்கு கம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரை வெல்லக்கூடிய அணியாக ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் வெளிப்படுத்திய செயல்பாடு எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது.
ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பு பறித்து மாற்றப்பட்டது, அந்த அணிக்குள் பெரிய பின் விளைவுகளையும் பிரிவையும் ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக அவர்கள் ஒரே அணியாக சேர்ந்து விளையாட முடியாமல், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் கடுமையான விமர்சனம் செய்திருந்தார்கள். இதற்கு தற்பொழுது கம்பீர் தன்னுடைய பாணியில் பதில் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “இவர்கள் இருவரும் கேப்டனாக இருந்த பொழுது, இவர்கள் செயல்பாடுகள் எப்படி இருந்தது? ஏபி டிவிலியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் இருவரும் கேப்டனாக இருந்த பொழுது பெரிய அளவில் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. இவர்களுடைய ரெக்கார்டுகளை பார்க்கும் பொழுது மற்ற கேப்டன்களை விட மிக மோசமாக இருக்கிறது.
இதையும் படிங்க : லாங்கர் இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தாரா? – அவரே வெளியிட்ட சுவாரசிய தகவல்
மேலும் ஐபிஎல் தொடரில் கெவின் பீட்டர்சன் கேப்டனாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன். அவர் தனது சொந்த ஸ்கோரை தவிர வேறு எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரின் வின்னிங் கேப்டனாக இருக்கிறார். எனவே நீங்கள் ஆரஞ்சு பழங்களை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட வேண்டும். ஆரஞ்சு பழத்தை ஒருநாளும் ஆப்பிளுடன் ஒருநாளும் ஒப்பிடக்கூடாது” எனக் கூறியிருக்கிறார்.