இந்திய கிரிக்கெட் அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடர் வெற்றிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தனது பணிச்சுமை, தனிப்பட்ட அணுகுமுறை மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு ஃபார்மட்டுகளுக்கு இடையே தொடர்ச்சியாகப் பயணம் செய்து அணியை வழிநடத்துவதும், வெளியில் இருந்து வரும் கருத்துக்களை எதிர்கொள்வதும் பயிற்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது.
இந்தச் சூழலில் தனது கொள்கைகள் மற்றும் பணிச்சுமை குறித்து ஹெட் கோச் கௌதம் கம்பீர் பேசும்போது, “என் டிக்ஷனரி, டைரக்டரி மற்றும் ஐடியாலஜியில் பயம் என்ற வார்த்தைக்கு இடமில்லை. நாங்கள் ப்ரொபஷனல்கள், இதில் எக்ஸ்க்யூஸ்க்கு இடமில்லை. ஒர்க்லோட் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்க்கும்போது இது கடினமானதுதான். இந்திய அணியை கோச் செய்யும் போது மக்கள் ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள், எல்லாரும் ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தனது மன நிலைமை மற்றும் விமர்சனங்கள் குறித்து அவர் பேசும்போது, “நான் உண்மையில் மனதளவில் சோர்வடைந்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த அழுத்தத்தைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு நான் மன வலிமையுடன் இருக்கிறேன். என்னால் பிரஷரைத் தாங்க முடியும், புல்லட்டை வாங்கிக்கொள்ள முடியும். ஆம், நானும் ஒரு மனிதர்தான், அதனால் சோர்வு ஏற்படுகிறது. என்னை விமர்சித்து அவர்களுக்கு இரவு தூக்கம் நன்றாக வருகிறது என்றால், அவர்கள் அதைத் தாராளமாகச் செய்யட்டும். சோஷியல் மீடியா அல்லது டிவிகளில் வரும் விமர்சனங்கள் என் வாழ்க்கையையோ வேலையையோ பாதிப்பது இல்லை” என்றும் கூறி இருக்கிறார்.
வெளியில் இருந்து வரும் எந்தவொரு விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், பயமின்றி இந்திய அணியை வெற்றிகரமான பாதையில் அழைத்துச் செல்வதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியாக இருக்கிறார்.






