திறமை இருந்தும் விளையாட வாய்ப்பு கிடைக்காத ஆச்சரியமான நான்கு குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!

0
9495
Ipl2023

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் புதிதாக வந்த அணியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் ஹர்திக் பாண்டியா மற்றும் கில் தவிர யாரும் நம்பிக்கை அளிப்பவர்களாக இல்லை. மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடத்தில் ஒருவருமே இல்லை.

கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு பின்பு, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துக்கணிப்பில் குஜராத் அணிக்கு கடைசி இடமான பத்தாவது இடமே கிடைத்தது!

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததும் மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்று, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் தகுதிப் பெற்று சாம்பியன் ஆகியும் அசத்தியது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் தற்பொழுது வரை இதே நிலைதான்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெஞ்ச் பலம் மற்ற எந்த அணிகளையும் விட மிகப்பலமாக இருக்கிறது. அந்த அணிக்கு விளையாடாத வீரர்கள் வேறு அணியில் இருந்தால் உடனடியாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இருந்து விளையாட வாய்ப்பு பெறாத திறமையான வீரர்கள் நான்கு பேரைப் பார்ப்போம்!

சாய் கிஷோர் ;

- Advertisement -

இடதுகை சுழற் பந்துவீச்சாளரான இந்தத் தமிழக வீரருக்கு கடந்த ஐபிஎல் தொடரில் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இவரும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை விக்கெட்டில் கூட வாய்ப்பு தரப்படவில்லை. ரஷீத் கானுடன் இணைந்து அவரது நாட்டின் இளம் வீரர் நூர் அகமது சுழற் பந்துவீச்சில் கூட்டணி அமைக்க, இவருக்கு விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

மேத்யூ வேட் ;

ஆஸ்திரேலிய சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பினிஷர் இடத்தில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிரடியான இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். ஆனால் இவருக்கும் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் அணியில் இடம் தரப்படவில்லை. விக்கெட் கீப்பராக சகா சிறந்த முறையில் இருப்பதாலும், மேலும் வெளிநாட்டு வீரர்களின் இடத்தில் வேறு சில வெளிநாட்டு வீரர்கள் தேவைப்படுவதாலும் விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

கே.எஸ் பரத் ;

பெங்களூர் அணியில் சிறப்பாக செயல்பட்டு கடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காமல், அந்த அணியால் குஜராத் அணிக்கு கே.எஸ் பரத் மாற்றப்பட்டார். சகாவின் இடத்திலோ அல்லது சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இடத்திலோ இவரால் விளையாட முடியும் என்றாலும், மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சிவம் மாவி ;

இந்த ஆண்டு 6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளரான இவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படவில்லை. மூத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மாவின் மிகச் சிறப்பான செயல்பாடு இவருக்கான இடத்தை பறித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.