பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையில் விளையாடக் கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியிருக்கிறார்.
தற்போது பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கைக்கு மாற்ற கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐசிசி அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.
வலிமையான இதயம் தேவை
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிக்கொள்ளவில்லை என்றால் பாதி ஈர்ப்பு போய்விடும். தற்போதுள்ள கிரிக்கெட் அதிகார அமைப்பை சவால் செய்வதற்கு இது ஒரு சரியான வாய்ப்பு. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
“பாகிஸ்தான் பங்களாதேஷுடன் நிற்பதாகவும், டி20 உலகக் கோப்பையில் விளையாட மறுப்பதாகவும் கூற வேண்டும். இது ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம். அதைச் செய்ய உங்களுக்கு வலிமையான இதயம் தேவை”
ஐசிசி செய்வது தவறு
“இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பு குறை இல்லை என எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் கூற முடியாது. இந்த நிலையில் ஐசிசி அமைப்பு இப்படி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மிகப் பாதுகாப்பான நாடுகளில் கூட இப்படி சொல்ல முடியாது. ஐசிசி தன் வரம்பை மீறி சொல்லிக் கொண்டிருக்கிறது”
இதையும் படிங்க: அபிஷேக் சர்மா வேற மாதிரி பேட்ஸ்மேன்.. இந்த தப்பை செய்யறதே கிடையாது.. பையனோட பிளஸ் பாயிண்ட் இதுதான் -ஸ்ரீகாந்த் பாராட்டு
“தற்போது துருப்புச்சீட்டு பாகிஸ்தானிடம் இருக்கிறது. வங்கதேசத்தின் நிலைப்பாடு சரியாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. பாகிஸ்தான் விளையாடாமல் இருப்பது உலக கோப்பையை நிறுத்துவது போல. இதற்கு பாகிஸ்தானுக்கு சில தடைகள் விதிக்கப்படலாம். ஆனாலும் இது நாம் யார் பக்கம் நிற்கிறோம் என்பதை காட்ட வேண்டிய நேரம்” என்று கூறியிருக்கிறார்.






