நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அணியை வழிநடத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது. இதில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூரிய குமாரின் அசத்தல் கேப்டன்சி
சூரியகுமார் யாதவ் ஆன்பீல்டு கேப்டன்ஷியில் நேற்று மிகவும் ஆபாரமாக செயல்பட்டு இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் உடன் களம் இறங்கினார். மேலும் அந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஸ்தீப் சிங்குக்கு பவர் பிளேவில் மூன்று ஓவர்களை கொடுத்து மேலும் ஆச்சரியப்படுத்தினார்.
இத்துடன் அக்சர் படேல் அவரது முதல் ஓவரில் ரன்கள் கொடுக்க அவரை நிறுத்திவிட்டு, வருண் சக்கரவர்த்திக்கு மூன்று ஓவர்கள் கொடுத்து இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டை சேதப்படுத்தினார். இதற்கு அடுத்து மீண்டும் அக்சர் படேலை பதினான்காவது ஓவருக்கு கொண்டு வந்து சரியான நேரத்தில் பயன்படுத்தி அவர் மூலமாகவும் விக்கெட் கைப்பற்றினார். இப்படி அவரது கேப்டன்சி சிறப்பான முறையில் அமைந்திருந்தது.
சூரியகுமார் செய்த ஒரு காரியம்
இது குறித்து பாராட்டி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “அர்ஸ்தீப் சிங் பந்தை இரண்டு பக்கமும் நகர்த்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் முதலில் இரண்டு விக்கெட் கைப்பற்றி கொடுத்தார். ஹர்திக் பாண்டியா கொஞ்சம் ரன்களுக்கு சென்றார். மற்ற பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு சூரியகுமார் யாதவ் மிகவும் ஆதரவாக இருந்தார். மேலும் பவர் பிளேவில் அர்ஸ்தீப்புக்கு சூரியகுமார் அவருடைய மூன்றாவது ஓவரை கொடுத்தபோது, ஆஹா இது அற்புதமான கேப்டன்சி என பாராட்டினேன்”
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்திக்கு வழியை கண்டுபிடிங்க.. இல்லனா முடிஞ்சது.. அவர் எப்படி தெரியுமா? – மைக்கேல் வாகன் பேச்சு
“கம்பீரைப் பொறுத்தவரையில் இந்த அணிக்கு முக்கியமான ஒரு அணுகுமுறையை கொடுத்திருக்கிறார். ஸ்கோர் எதிரணி எவ்வளவு அடித்திருந்தாலும் சரி, தங்களுடைய அணி 230 ரன்கள் எடுக்கின்ற வேகத்தில் விளையாட வேண்டும் என்று பழக்கப்படுத்தி இருக்கிறார். அவர்கள் அதை மனதில் வைத்தே எந்த ரன்னையும் துரத்துகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






