சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்த சூழ்நிலையில் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் ஆச்சரியமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சை அதிரடியாக தாக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதபவின் பந்துவீச்சில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன் திறன் முக்கிய பங்கு வகித்தது.
அதாவது இதுவரை வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களது முதல் ஸ்பெல்லை வீசி முடித்தவுடன், ஜடேஜா அல்லது அக்சார் பட்டேல் அடுத்த ஓவர் ஸ்பெல்லை வீச வருவார்கள். 25 வது ஓவருக்கு பிறகு குல்தீப் யாதவ் பந்து வீச வரும் நிலையில், இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே கொண்டு வரப்பட்டார். இதனை நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்க்காத காரணத்தால் தான் போட்டி இந்திய அணியின் பக்கம் விரைவாக சாய்ந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தப் போட்டி இந்திய அணி பக்கம் முதலில் திரும்ப குல்தீப் யாதவ்தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவர் பந்து வீச இறங்கிய போது அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் வழக்கமாக 20 முதல் 25 ஓவர்களுக்கு பிறகு தான் பந்து வீச வருவார் என்று நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவரை சீக்கிரமாகவே கொண்டு வந்து நியூசிலாந்து அணியை ஆச்சரியப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குல்தீப் யாதவ் முதலிலேயே வருவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க:தாக்குதல் ஆட்டம் என் இயல்பான பாணி அல்ல.. அவங்க இல்லன்னா இதை செஞ்சிருக்க முடியாது – ரோஹித் சர்மா
அவர்கள் நிஜமாக ஜடேஜா அல்லது அக்சர்தான் வருவார் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் இவரை எதிர்பார்க்க மாட்டார்கள் இது ரோகித் சர்மாவின் சிறந்த முடிவு என்று அப்போதே நான் நினைத்தேன்” என்று பேசி இருக்கிறார். தொடக்க விக்கட்டை வீழ்த்திய பிறகு நியூசிலாந்து அணியின் ரன் வேகம் முற்றிலுமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு இறங்கி விளையாடிய இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்து சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.






