18வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களது விருப்பமான வீரர்களை தக்க வைத்தது மட்டுமல்லாமல் புதிய வீரர்களை வாங்கும் பட்டியலையும் தயார் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஸ்டார்க் குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு செலவிடப்படும் அதிகபட்ச தொகையாக அமைந்தது. இருப்பினும் லீக் போட்டிகள் வரை அவரது செயல் திறன் கொல்கத்தா அணிக்கு நன்றாக அமையவில்லை.
ஆனால் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டார்க் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடந்த முறையைப் போல ஸ்டார்க் இந்த முறை அதிக ஏலம் செல்ல வாய்ப்பில்லை என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஐபிஎல் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மட்டுமே ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு முந்தைய லீக் ஆட்டங்களில் மோசமாக செயல்பட்டு நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். எனவே முந்தைய ஐபிஎல் ஏலத்தை போல இந்த முறையும் அதிக தொகைக்கு ஏலம் செல்வார் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.
இதையும் படிங்க:கோலி பண்ட் இல்லை.. இந்த 22 வயது பையன்தான் ஆஸி பவுலர்ஸ்க்கு தண்ணி காட்டுவார் – ரவி சாஸ்திரி பேட்டி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை திரும்ப வாங்கும் முயற்சியில் ஈடுபடும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு அணி எப்போதுமே ஒரு வெற்றிகரமான கலவையை உருவாக்க விரும்பும். உங்களால் முடிந்த வரை ஒரு சிறப்பான அணியை உருவாக்க விரும்புகிறீர்கள். எனவே கொல்கத்தா அணி நினைத்தால் அவரை திரும்பவும் வாங்கலாம் ஆனால் 24 கோடிக்கு நிச்சயமாக இருக்காது” என்று கூறி இருக்கிறார். இன்றைய கொல்கத்தா அணி அவரை திரும்ப வாங்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.