கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன சடகோபன் ரமேஷ் இதுகுறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் சற்று தடுமாறி வந்த சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலமாக அரை இறுதி தகுதி பெற்றுள்ள இந்திய அணி அடுத்ததாக வருகிற வியாழக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ், சஞ்சு சாம்சனிடம் இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பனர் எனவும், இனி இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாக சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அவர் தனது முழுத்திறமையும் வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ஒரு ஆட்டத்தை வென்று கொடுப்பது இதுவே முதல் முறையாகும். மலை உச்சியில் இருக்க வேண்டிய ஒரு வீரர் நீண்ட காலமாக சாதாரண நிலையில் சுற்றித்திரிந்தார். இந்த இடத்தில் இருந்து அதிக உயரங்களை எட்டும் திறன் அவருக்கு உள்ளது. எனவே இனி அவர் இதை தவற விட மாட்டார் என்று நம்புகிறேன்.
ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது இது போன்ற ஆட்டங்களை தான். அவர் இதே போன்று தனது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினால் பல போட்டிகளை தனி ஆளாக அவர் வென்று கொடுக்க முடியும். மேற்கிந்திய தீவுகள் இஷான் கிஷன் அபிஷேக் ஷர்மா மீது கவனம் செலுத்தி பார்மில் இல்லாத சாம்சன் மீது கவனத்தை செலுத்த தவற விட்டது” என்று அவர் பேசி இருக்கிறார்.






