இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் அவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அணிக்குள் நடந்த விவாதம் குறித்து முன்பு நான் வெளிப்படையாக பேசியிருக்கக் கூடாது எனவும், அதற்காக விராட் கோலி இடம் தான் மன்னிப்பு கேட்டதாகவும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா பேசியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக விராட் கோலி இருந்தார். அவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவரது ஆக்ரோஷமான தலைமைத்துவ பாணி அதிகமாக வெளியில் பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி காலகட்டத்தில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சில வருடங்களுக்கு முன்பு, விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து எதிர்மறையாக சில கருத்துக்களை பேசி இருந்தார்.
இதனால் தனக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது எனவும், ஒவ்வொருவருக்கும் தனது கேப்டன் பாணியை வெளிப்படுத்த உரிமை உள்ளது எனவும், தான் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்பதால் விராட் கோலி இடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக ராபின் உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து உத்தப்பா விரிவாக கூறும்போது ” அந்த முழு உரையாடலிலும் விராட் கோலியை பற்றி பேசுவது என்னுடைய நோக்கம் கிடையாது. அந்த நேர்காணல் என்னைப் பற்றியதாக இருந்தபோது என்னிடம் விராட் கோலி குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் பதில் கூறும் வகையில் சில கருத்துக்களை கூறியிருந்தேன். அந்த நேரத்தில் விராட் கோலியின் உணர்வுகளை நான் அறிந்திருக்க வேண்டும். நான் கூறிய சில எதிர்மறையான கருத்துக்களால் விராட் கோலி உடனான உறவு பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கில் விஷயம் மார்க்கெட்டிங் பிசினஸ்தான்.. சஞ்சு 5 வருஷம் முன்ன அத செய்யாம ஏமாந்துட்டார் – ராபின் உத்தப்பா கருத்து
நான் இதிலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால் இது குறித்து நான் அவரிடம் முன்பே பேசி இருக்க வேண்டும். நான் அப்போது விராட் கோலி உடனான எனது அனுபவத்தை பேசவில்லை. எனது நெருங்கிய நண்பர் ஒருவர் விராட் கோலியின் கீழ் விளையாடிய போது அதில் ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருக்கிறேன். அது அவரின் தலைமைத்துவ பாணி. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான தலைமைத்துவ பாணியுள்ளது. இதனால் நான் அவரிடம் இது குறித்து முன்பே பேசி இருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்” என்று உத்தப்பா பேசியிருக்கிறார்






