இந்திய அணியில் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே தொடருக்கு இந்திய அணியில் ஷமி இல்லாததும் பும்ராவின் பணிச்சுமை குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பராஸ் மஹாம்ப்ரே. இவர் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து மிகச் சிறப்பான முறையில் வேலை செய்திருக்கிறார். மேலும் எதிர்காலத்திற்கான வேகப் பந்துவீச்சாளர்களை உருவாக்குவதற்கான சிறந்த தொலைநோக்கு பார்வையையும் கொண்டிருந்த பயிற்சியாளராக இருந்தார்.
தற்போது முகமது ஷமி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் இல்லாதது வெளிப்படையாகவே பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் முகமது சிராஜ் பவுலிங் பார்ம் இல்லாமல் இருந்து வருவது கூடுதல் பின்னடைவை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
மேலும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 30 வருடங்கள் கழித்து நான்கு போட்டியில் இருந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மாற்றப்பட்டு இருக்கிறது. எனவே ஒரு வேகப் பந்துவீச்சாளராக பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் விளையாடுவது மிகவும் கடினமாகிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பவுலிங் கோச் பராஸ் மஹாம்ப்ரே கூறும்பொழுது “ஷமியை தவற விடுவது பின்னடைவுதான். ஏனென்றால் அவர் கொண்டு வரும் திறமையும் அனுபவமும் மிகவும் பெரியது. அவர் பும்ராவுடன் இணையும் பொழுது மிகப்பெரிய வலிமையான ஜோடியாக இருப்பார்கள். ஆனால் அவர் கிடைக்காதது குறித்து நாம் வெட்கப்பட வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்”
“நாம் நாணயத்தின் இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். தேர்வாளர்கள் திறமை இருக்கக் கூடிய வீரர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அவர்களால் இந்திய தேசிய அணிக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று உணர்வதால்தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் ஷமியின் இடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. பயிற்சி போட்டியில் கோலிக்கு நடந்த 2 சோகம்.. 3 வீரர்கள் காயம்.. டாப் ஆர்டர் சொதப்பல்.. வெளியான தகவல்கள்
“வீரர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை என்பது இப்பொழுது மட்டும் இல்லாமல் எங்கள் காலத்தில் இருந்தேசெய்யப்பட்டு வருகிறது. எனவே பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. நிச்சயம் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும். அந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.