வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இருந்து திடீரென நீக்கியுள்ள இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் தொடரில், அணியின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, முதல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் ரன்களைக் கொடுத்தார் என்பதற்காக மூன்றாவது போட்டியில் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
இதுகுறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசும்போது “மயாங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் வீரர்களை வளர்ப்பது நல்ல விஷயம் தான், இருவரும் நன்றாக பந்துவீசுகிறார்கள். எவ்வளவு காலத்திற்கு நாம் பும்ராவை மட்டுமே நம்பியிருக்க முடியும்? ஆனால் அவர்கள் குல்தீப் யாதவின் நம்பிக்கையை முற்றிலும் பாழடித்துவிட்டனர். இரண்டாவது போட்டியில் அவர் ரன்களைக் கொடுத்துவிட்டார் என்பதற்காகவே மூன்றாவது போட்டியில் அவர் எங்கேயும் காணப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஒரு சாதாரண அணிக்கு எதிராக நாம் விளையாடும்போது வீரர்களை இப்படி கையாள்வது சரியல்ல. அவர் ஒரு மேட்ச் மோசமாக விளையாடிவிட்டார் என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்குவது அவரது மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் கடுமையாகப் பாதிக்கும்” என்று கூறி இருக்கிறார்.