இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது சரிதான் என இங்கிலாந்து முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு ஏறக்குறைய 500 ரன்களை எட்டி இருக்கிறார். அதே சமயத்தில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார்.
இந்திய ரசிகர்கள் விமர்சனம்
சமீப காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் தராதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது. அவர்கள் சமூக வலைதளத்தில் இந்தியத் தேர்வுக் குழுவை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரை வென்றால் இந்த விமர்சனங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியின் வீரராகவும் கேப்டனாகவும் அவர் முக்கிய தொடர்களை வரிசையாக வென்று இருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பொழுது, இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாசை தேர்வு செய்யாதது சரிதான்
இதுகுறித்து மான்டி பனேசர் கூறும் பொழுது ” ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யாமல் தந்திரத்தை இந்தியா தவற விட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்து ஸ்விங் சூழ்நிலையில் விளையாடுவதற்கு ஏற்ற பேட்டிங் டெக்னிக் அவரிடம் கிடையாது. பந்தை வரவைத்து கால்களை நன்றாக நகற்றி ஆடி சமாளிக்க வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் அப்படியானவர் இல்லை”
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்காக நான் எதையும் செய்வேன்.. வீரர்கள் கிட்ட கூட அதை கேளுங்க.. காரணம் இதான் – ரிக்கி பாண்டிங் பேட்டி
“ஸ்ரேயாஸ் மிகவும் வேகமான கைகளைக் கொண்ட வீரர். அவர் பந்தை மென்மையாக வர விட்டு விளையாட மாட்டார். அவருக்கு அற்புதமான கண்கள் மற்றும் கைகள் ஒருங்கிணைப்பு இருக்கிறது. இதுவெல்லாம் உங்களுக்கு வேகமான பவுன்ஸ் ஆடுகளத்தில் சரியாக இருக்கும். ஆனால் பந்து ஆடுகளத்தில் பட்டு நகரும் பொழுதோ அல்லது ஸ்விங் ஆகும் பொழுதோ உங்களுக்கு இது சரிவராது. அவரை தேர்வு செய்திருந்தால் நிச்சயம் அவரது பலவீனம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அவர் இதற்கு சீக்கிரத்தில் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






