நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் நாளை மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வெல்வது மிகவும் கடினம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் பால் காலிங்வுட் கூறியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைய செய்திருந்தது. ஆனால் தற்போது அப்படி எல்லாம் செய்ய முடியாது என பால் காலிங்வுட் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “சத்தியமாக இந்த முறை இந்தியா தோற்பதை நான் பார்க்கவில்லை. இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்துவதற்கு அசாதாரணமான ஒன்று அவர்களுக்கு தேவை. இந்தியா மிகச் சரியான அணியுடன், மேலும் பும்ரா உடன் சேர்ந்து தனித்து நிற்கிறது. அவர் சிறந்த உடல் தகுதி மற்றும் வேகம் துல்லியமென அருமையாக இருக்கிறார். எந்த அணியும் அவருடைய பந்து வீச்சுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.
120 பந்துகள் கொண்ட ஆட்டத்தில், சிறப்பான 24 பந்துகளை வைத்திருக்கும் பும்ரா எதிரணிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறார். அமெரிக்காவின் கடினமான ஆடுகளங்களில் கடினமான நேரங்களில் இதன் காரணமாக இந்திய அணி மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது.
இருதரப்பமே ஆக்ரோஷமான ஆட்டத்தை கடைபிடிப்பதால் போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும். மேலும் இந்த போட்டிக்கான கயானா மைதானத்தின் ஆடுகளம் மிகவும் முக்கியமானது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து மேலே இருக்கிறது. அதுவே கொஞ்சம் பந்து நின்று திரும்பும் ஆடுகளத்தில் இந்திய அணி முன்னணியில் இருக்கிறது.
இதையும் படிங்க : நாளை IND-ENG செமி-பைனலில் அச்சுறுத்தும் மழை.. இந்தியாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. வானிலை அறிக்கை
2022ல் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த பொழுது அவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போது அவர்கள் மிகவும் பழமைவாதமாக விளையாடினார்கள். குறிப்பாக பத்து ஓவர்களில் மெதுவாக ஆரம்பித்து கடைசியே பத்து ஓவர்களில் வேகமாக விளையாடுவது அவர்களுடைய பாணியாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் வியூகம் மாறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.






