சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான பயணத்தில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூட்டணி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து செயல்பட்டு, அணிக்கு பல வெற்றிகளையும் கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளனர். இதனால் இவர்களது கூட்டணி கிரிக்கெட் உலகில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தோனி மற்றும் ஃப்ளெமிங் இடையேயான கூட்டணி குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராபின் உத்தப்பா சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தோனி கேப்டனாக இருந்தபோது ஃப்ளெமிங்கின் பணி எவ்வாறு இருந்தது, தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ஃப்ளெமிங்கின் பங்கு எவ்வாறு மாறியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், “மைதானத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தோனியை விட சிறந்தவர் கிடையாது. தோனி போன்ற ஒரு தலைவருடன் இருந்தபோது, ஃப்ளெமிங் அணியில் உள்ள அனைவரையும் நிர்வகித்து, முடிந்தவரை பல ஆலோசனைகளை தோனிடம் வழங்க வேண்டியிருந்தது. அந்த ஆலோசனைகளும் தோனியின் இயல்பான கிரிக்கெட் அறிவும் ஒன்றாக இணைந்து, வெற்றிகரமான முடிவுகளை உருவாக்கின. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைகளே சாட்சி. கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ஃப்ளெமிங்கிற்கு அணியின் முடிவுகளில் அதிக பங்கு கிடைத்த நிலையில், அந்த மாற்றம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே இரு தரப்பும் பிரியும் முடிவை எடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.