இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிக விரைவாக ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா மந்தமான ஆட்டம்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். இந்த நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மட்டுமின்றி குறிப்பிட்ட சில வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பிரிஸ்பானில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 27 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியில் தனது பேட்டிங் தவறை சரி செய்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் ரோஹித் சர்மா மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹைடன் ரோகித் சர்மா விளையாட வேண்டிய முறை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
என் சகோதரா இயல்பாக விளையாடுங்கள்
இது குறித்து ஹைடன் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மாவை பற்றி நான் நினைக்கும் போது ஒரு ஃப்ரீ ஸ்கோரிங் பேட்ஸ்மேன் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த இரட்டை சதம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்த மகத்தான சாதனைகள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்திருக்கும் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது. அவரைப் பற்றி அவருக்கே ஒரு எண்ணமும் பெரிய ஆற்றலும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மூன்றாவது போட்டியில் அவர் விளையாடும் போது மந்தமாக இருப்பதை உணர்ந்தேன்.
இதையும் படிங்க:கபில்தேவ் தோனி இதுல பெஸ்ட்.. ஆனா இந்த ஒரு விஷயத்துல தோனிதான் முன்னாடி இருக்கார் – கவாஸ்கர் கருத்து
ஒரு பேட்டிங் பார்ட்னராக நான் அவரிடம் கூற விரும்புவது நீங்கள் பந்தை தடுத்து ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை என்று தான் கூறுவேன். அவர் பந்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். இயல்பாகவே அவர் அடித்து ஆட கூடிய திறன் படைத்தவர் என்பதால் அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். ரோஹித் என் சகோதரனாக மிகுந்த நோக்கத்துடன் ஆற்றலோடு விளையாட வேண்டும்” என்று விரும்புகிறேன் என கூறியிருக்கிறார்.






