உலக கோப்பை வரலாற்றில் முதல் முறை.. 771 ரன் திரில்லர்.. நியூசியை வென்றது ஆஸி.. அனல் பறக்கும் உலக கோப்பை!

0
1261
Australia

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி இருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 81, டிராவிஸ் ஹெட் 109, மிட்சல் மார்ஸ் 36, மேக்ஸ்வெல் 41, இங்லீஷ் 38, கம்மின்ஸ் 37 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் யாரும் சரியான ரன் பங்களிப்பு தராததால், 49.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து, ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகப் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் வில் யங் 32, மற்றும் டெவோன் கான்வே 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் நிலைத்து நின்று அணிக்கு வேகமாக ரன்கள் கொண்டு வந்தார்கள். மிட்சல் 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து டாம் லாதம் 21, பிலிப்ஸ் 12 ரன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மிகச்சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 77 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 116 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த மிச்சல் சான்ட்னர் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேட் ஹென்றி 9 ரன்கள் எடுத்தார். அப்பொழுது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் கைவசம் இருக்க 32 ரன்கள் தேவைப்பட்டது.

ஆட்டத்தின் 49 ஆவது ஓவரை ஹேசில்வுட் வீச 13 ரன்கள் கிடைத்தது. இதற்கு அடுத்து கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை ஸ்டார்க் வீசினார்.

முதல் பந்தை சந்தித்த போல்ட் ஒரு ரன் எடுத்தார். ஜேம்ஸ் நீசம்க்கு வீசப்பட்ட அடுத்த பந்து வைடாக பவுண்டரிக்கு சென்றது. இதற்கு அடுத்து 5 பந்துகளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த மூன்று பந்துகளில் தொடர்ந்து ஜேம்ஸ் நீசம் தலா இரண்டு ரன்கள் எடுக்க, கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேம்ஸ் நீசம் இரண்டு ரன்களுக்கு ஓடி ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்துக்கு சிக்சர் தேவைப்பட்டது. அந்தப் பந்தை சந்தித்த பெர்குஷன் பந்தை காற்றில் அடிக்க முடியாததால், பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்த போட்டியில் மொத்தம் இரண்டு அணிகளும் சேர்ந்து 771 ரன்கள் அடித்திருக்கின்றன. இந்த ரன்னை சேஸ் செய்திருந்தால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காக இது உலக சாதனையில் சேர்ந்திருக்கும். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸிலும் 350 ரன்களை தாண்டியது இதுவே முதல் முறை.

தற்போது புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்தியா தென் ஆப்பிரிக்காவை விட ஒரு போட்டி குறைவாக விளையாடி இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.