கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“முதல்ல கண்ணாடில உங்கள பாருங்க.. அடுத்தவங்கள தப்பு சொல்லாதிங்க” – இலங்கை வீரர்களுக்கு முரளிதரன் கடுமையான எச்சரிக்கை!

சமீப காலத்தில் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்ட உலகக் கோப்பையை வென்ற அணியாக இலங்கை கிரிக்கெட் அணி மாறி வருகிறது.

- Advertisement -

நான்கு உலகக் கோப்பைகளை வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி நாம் கண்முன்னே மிகவும் மோசமான நிலைக்கு சென்று இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தற்பொழுது அதே இடத்திற்கு இலங்கை கிரிக்கெட் சென்று கொண்டிருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் 50 ரன்களில் இந்தியாவுக்கு எதிராக சுருண்ட இலங்கை அணி, அடுத்து இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 55 ரன்களுக்கு சுருண்டு மீண்டும் அதிர்ச்சி அளித்தது.

இதற்கு அடுத்து உலகக் கோப்பை தொடரின் இறுதியில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தை, அவர்களது நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது. அரசு கிரிக்கெட் வாரியத்தில் தலையிட்டதால் அடுத்து ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை தடை செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக இலங்கை மீதான கிரிக்கெட் தடையை ஐசிசி நீக்கியது. ஆனாலும் அவர்கள் தங்களை மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நிலை நிறுத்திக் கொள்ள செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ரனதுங்கா மற்றும் இலங்கை ரசிகர்களில் சிலர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் குறித்து பேசி உள்ள இலங்கை இல்லை லெஜன்ட் முத்தையா முரளிதரன் கூறும் பொழுது ” இலங்கை வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே இல்லை. வீரர்கள் களத்தில் இறங்கியவுடன் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயிற்சியாளர்கள் களத்திற்கு வெளியே பல விஷயங்களை சொல்லலாம்.அவர்கள் பல திட்டங்களை உருவாக்கலாம். நாள் முடிவில் வீரர்கள்தான் விளையாடி வெற்றி பெற்று ஆகவேண்டும்.

நாங்கள் 20 சதவீத போட்டிகளை கூட வெல்லவில்லை. இந்த மோசமான செயல் திறன் ஏன் என்று அவர்கள் திரும்பி சென்று பார்க்க வேண்டும். தங்களது திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும்.

எனவே நிர்வாகிகள் இலங்கை கிரிக்கெட்டின் தோல்விக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பிற விஷயங்களை காரணமாக காட்டுவதை விட, நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று முதலில் கண்ணாடியில் பாருங்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக வீரர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் மோசமான செயல் திறன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற வீரர்களுடன் போட்டியிடுவதற்கு வீரர்கள் தங்களை நம்ப வேண்டும். இந்த விஷயங்களை இளம் கிரிக்கெட் வீரர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

Published by