வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை வென்றிருந்த இங்கிலாந்து நேற்று இரண்டாவது போட்டியையும் வென்றது.
சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டர்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 1, எவின் லீவிஸ் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து வந்த பூரன் 14, ரோஸ்டன் சேஸ் 13, ரூதர்போர்டு 1 சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.
ஒரு முனையில் கேப்டன் ஒரு ரோமன் பவல் போராடி 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக ரொமாரியோ ஷெப்பர்ட் 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சகிப் மக்மூத், லிவிங்ஸ்டன் மற்றும் மௌஸ்லி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
புது இடத்தில் பட்லர் அதிரடி
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் கோல்டன் டக் அடிக்க, வில் ஜேக்ஸ் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வழக்கமாக தான் விளையாடும் துவக்க இடத்தில் களம் இறங்கவில்லை.
இதையும் படிங்க : பாண்டிங் ஆஸி கிரிக்கெட் பத்தி பேசுங்க.. ரோகித் விராட் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? – கம்பீர் பதிலடி
இந்த முறை ஜோஸ் பட்லர் மூன்றாவது இடத்தில் விளையாடினார். மொத்தம் 45 பந்துகளை சந்தித்த பட்லர் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் எடுத்தார். அடுத்து லிவிங்ஸ்டன் 11 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் இலக்கை எட்டி, மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. ஐபிஎல் மெகா ஏலம் நெருங்க இருக்கும் நிலையில் பட்லர் இந்த அதிரடி பல அணிகளின் கவனத்தை திருப்பக் கூடியதாக அமைந்திருக்கிறது!