ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியமான போட்டியில் ஒமான் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஆண்டிகுவா மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கில் வெறும் 3.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து இடம்பெற்றிருக்கும் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஸ்காட்லாந்து அணி 2 வெற்றிகள், 1 டிராவுடன் 5 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. அந்த அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் 1 போட்டி இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் 1 டிராவுடன் மைனஸ் 1.86 ரன் ரேட் உடன் பின்தங்கி இருந்தது. ஸ்காட்லாந்து ரன் ரேட் பிளஸ் 2.16 என உச்சத்தில் இருந்தது.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி அடுத்து ஓமான் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிராக பெரிய ரன் ரேட்டில் வெல்ல வேண்டும், ஆஸ்திரேலியா அணியிடம் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைய வேண்டும், அப்பொழுதுதான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஒமான் அணிக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஒமான் அணிக்கு பேட்டிங் வரிசையில் 7-ம் இடத்தில் வந்த சோயப் கான் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டு 23 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 13.2 ஓவரில் ஒமான் அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் 4, ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் 3 பந்தில் 12 ரன், வில் ஜேக்ஸ் 7 பந்தில் 5 ரன் எடுத்து வெளியேறினார்கள். கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பந்தில் 24* ரன், ஜானி பேர்ஸ்டோ 2 பந்தில் 8 ரன் எடுக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 3.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஓவர்இதையும் படிங்க : 5 ஓவர்கள் 23 ரன்கள்.. கையிலிருந்த போட்டியை தோற்ற நெதர்லாந்து.. பங்களாதேஷ் இந்தியா குரூப்பில் வர அதிக வாய்ப்பு
தற்போது ஸ்காட்லாந்து அணியின் ரன் ரேட் +2.16 என்று இருக்க, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் ஒரே போட்டியில் வெற்றியின் மூலமாக ஸ்காட்லாந்து அணியை விட அதிகமாக +3.08 என உச்சத்தைத் தொட்டிருக்கிறது. எனவே ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தால், இங்கிலாந்து நமீபியா அணியை வென்றால், எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே போட்டியில் மொத்த கதையையும் இங்கிலாந்து மாற்றி இருக்கிறது!