இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிநடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமான முறையில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டிஸ் அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணியின் அறிமுக வீரரான மைக்கேல் லூயிஸ் 27 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தரப்பில் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்மித் என ஐந்து பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடித்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 150 ரன்கள் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முதல் இன்னிங்ஸ் விட வெஸ்ட் இன்டிஸ் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் மிக மோசமாக அமைந்தது. இரண்டாவது நாளான நேற்று 76 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரை கேட்கும் கம்பீர்.. புதிதாக வரும் ஆச்சரிய பெயர்கள்.. பிசிசிஐ யோசனை
இன்று தொடர்ந்து மூன்றாவது நாளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஒன்பதாவதாக பேட்டிங் வரிசையில் வந்த பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி இறுதியாக இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் கைப்பற்றிய கஸ் அட்கின்சன் 2வது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை வென்று இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
மேலும் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட் சாதனை வீரர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். இரண்டு அணியின் வீரர்களும் பெரிய மரியாதை கொடுக்க, மிகவும் நெகிழ்வான நெகிழ்வுகளுடன் அவர் விடை பெற்றுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






