இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
பார்படாசில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸை கிங் மற்றும் லெவிஸ் ஆகியோர் துவங்கினார்கள். இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதில் முன்னணி வீரரான ஹெட்மயர் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதில் விக்கெட் கீப்பர் பூரான் மட்டுமே நிலைத்து நின்று 29 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 38 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரசல், செப்பேர்டு மற்றும் மோட்டி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குறித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மகமூத் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கி விளையாடியது.
இதில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தார். மறுமுனையில் வில் ஜாக்ஸ் 17 ரன்கள் மற்றும் பட்லர் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், அதற்குப் பிறகு களம் இறங்கிய பெத்தல் அதிரடியான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். பெத்தல் 36 பந்துகளில் ஐந்து பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர் என 58 ரன்கள் குவிக்க, மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பில் சால்ட் 54 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர் என 190.74 ஸ்ட்ரைக் ரேட்டில் 103 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:114 ரன் 9 விக்கெட்.. ஆப்கான் அணிக்கு பதிலடி தந்த பங்களாதேஷ்.. 8 மேட்சுக்கு பிறகு நடந்த சம்பவம்.. 2வது ஒருநாள் போட்டி
சிறப்பான சதத்தை பதிவு செய்த நிலையில் இங்கிலாந்து அணி 16.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய பில் சால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.