இந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரை தாங்கள் கட்டாயம் வெல்லுவோம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சவால் விட்டிருக்கிறார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடர் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. தற்போது ஆசஸ் சாம்பியனாக ஆஸ்திரேலியா அணி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொய் சொல்ல மாட்டேன்
இந்த முறை ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தோற்கடித்து வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் கோப்பையை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வோம் என அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் உறுதியாக தெரிவித்திருக்கிறார். உலகெங்கும் இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் மிகப்பெரிய விருந்தாக அமைய இருக்கிறது.
இதுகுறித்து பென் ஸ்டோஸ் பேசும் பொழுது “இது மிக நிச்சயமாக எங்களுடைய வாழ்வில் மிகப்பெரிய தொடர். ஆஸ்திரேலியா இங்கிலாந்து தாண்டி உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகவும் முக்கியமான தொடர். இதை நாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாமல் இதை மற்றொரு தொடர் என்று சொன்னால் அது பொய் சொல்வதாகத்தான் இருக்கும். இது நேரடியாக சவாலை ஏற்றுக் கொள்வதும், உண்மையை உணர்வதும் ஆகும்”
இங்கிலாந்துக்கு கோப்பை போகும்
“ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடுவது மிகப்பெரிய வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். அடுத்த இரண்டரை மாதங்கள் எங்களுக்கு பெரிய சவால்கள் காத்திருக்கும். இங்கு எதையும் நாம் ஆச்சரியமாகவோ அதிர்ச்சியாகவோ சொல்ல முடியாது. இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியாது என யாரும் பேச முடியாது. இங்கு எல்லாவற்றையும் எதிர்பார்த்து தான் வர வேண்டும்”
இதையும் படிங்க : ரோகித் சர்மாவின் நம்பர் 1 இடம் காலி.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஐசிசி தரவரிசையில் புதிய நம். 1
“நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம். இந்த ஆசஸ் தொடரை வென்று கோப்பையை எங்கள் நாட்டிற்கு எடுத்துப் போவதற்கு வந்திருக்கிறோம். இதுதான் எங்களுடைய இறுதி இலக்காக இருக்கிறது. எங்களுக்கு சிறந்த வாய்ப்பை தரும் என்று நாங்கள் நம்பும் ஒரு அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






